பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

43


நஞ்சுண்டவர் சிவன், இச்செயல் கொற்றவைக்கு ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளது. மருத மரங்களை ஒடித்ததும் உருளும் சகடத்தை உதைத்ததும், திருமாலின் தெய்வப் பிறவியாகிய (அவதாரமாகிய) கண்ணனின் செயலாகும். இச்செயல்களும் கொற்றவைமேல் ஏற்றப்பட்டுள்ளன. ஈண்டும், சைவவைணவ வேறுபாடற்ற பொது நோக்கைக் காணலாம். இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில், பிற இலக்கியக் கூற்றுகள் சில இவன் காண்பாம்.

கம்ப இராமாயணம்

ஒருவரே இருவராயுள்ள சிவனும் திருமாலும் வில் வைத்திருந்தனராம். யார் வில் வலியது என்பதைக் காண நான்முகன் இருவர்க்கும் போர் முட்டினாராம். இச்செய்தி பாலகாண்டம் - பரசு ராமப்படலத்தில் உள்ளது.

“யாரினும் உயர்ந்த மூலத்து
     ஒருவராம் இருவர் தம்மை
மூரிவெஞ் சிலைமேல் இட்டு

     மொய்யமர் மூட்டிவிட்டான்” (28)

என்பது பாடல் பகுதி. மற்றும் பூதத்தாழ்வார் பாடிய இயற்பா - மூன்றாம் திருவந்தாதியில் உள்ள - (திவ்யப் பிரபந்தம்)

“அரன், நாரணன் நாமம்; ஆள் விடை, புள் ஊர்தி,
உரைநூல் மறை உறையும் கோயில் - வரை நீர்
கருமம் அரிப்பு, அளிப்பு: கையது வேல், நேமி;
உருவம் எரி, கார்மேனி ஒன்று ”(5)

“பொன் திகழும் மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்” (98)

என்னும் பாடல்களும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன.