பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சுந்தர சண்முகனார்


வந்து உருத்தும் போழ்து அறியாமை காரணமாகத் துன்புறுவர். பாடல்:

“யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்
தீதுடை வெவ்வினை உருத்த காலைப்

பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்” (30-32)

(யாப்பு அறை = அறிவு அற்ற, கந்து = காரணம்)

மேலும் கவுந்தி கூறுகிறார்: சூதாட்டத்தால் நலிவுற்ற நளன், தன் மனைவியை நடுக்காட்டில் நள்ளிரவில் விட்டுச் சென்றது ஊழ்வினையால் அல்லவா? பாடல்:

“அடவிக் கானகத்து ஆயிழை தன்னை
இடையிருள் யாமத்து இட்டு நீக்கியது

வல்வினை யன்றோ?” (54-56)

மதுரையின் புறஞ்சேரியிலே, கவுந்தி, கோவலன், மாதவி ஆகிய மூவரும் தங்கியிருந்தபோது மாடலன் என்னும் மறையவன் ஆங்கு வந்தான். அவன் கோவலனை நோக்கிப் புகழ்மொழி கூறி, கோவலா! யான் அறிந்துள்ள வரையும் நீ இப்பிறப்பில் நல்ல அறச் செயல்கள் புரிந்துள்ளாய். இப்போது இந்தக் கண்ணகியோடு ஈங்கு வந்து அல்லல் உழப்பதற்குக் காரணம், முன் பிறவியில் செய்த வினையாய் இருக்கலாம்-என்று அறிவித்தான்.

“இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத்

திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” (91-93)

என்பது பாடல் பகுதி.

கொலைக் களக் காதை

கோவலன் சிலம்பு விற்கக் கடைத்தெருவுக்குப் புறப்படுமுன், கண்ணகியுடன் உருக்கமாக உரையாடுகின்றான்: