பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

69


குறு மகன் = பொற் கொல்லன். கடி நகர் = மதுரை. நாறு ஐங் கூந்தல் = கூந்தலை உடைய கண்ணகி. கோட்டு மா = பன்றி. ஆயிழையோடு பிணிப்பு அறுத்தோர் தம் பெற்றி எய்துதல் = பற்றற்ற துறவியர் அடையும் மேலுலகத்தைக் கண்ணகியோடு அடைதல். காமக் கடவுள் கையற்று ஏங்கல் = மணிமேகலையை வைத்துக் காம வேட்டையாட முடியாததால் மன்மதன் செயல் அறுதல். போதி அறவோன் = புத்தன்.

உலகியலில் முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு செய்தி இங்கே நினைவு செய்யப்பட்டுள்ளது. அதாவது: மாபெருங்குற்றம் செய்தவனை, மொட்டை அடித்து முகத்தில் கரும்புள்ளியும் செம்புள்ளியும் குத்திப் போதுமான உடையின்றிக் கழுதைமேல் ஏற்றி ஊர் சுற்றிவரச் செய்வது பண்டைய பழக்கமாம். அது இங்கே குறிப்பிடப்பட் டுள்ளது. கழுதைக்குப் பதிலாக ஈண்டு பன்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி, கோவலன் கொடுமைக்கு உள்ளாகப் போகிறான் என்பதைக் குறிக்கும். இதனால் கண்ணகி துயர் எய்தப் போகிறாள். மாதவி தன் மகள் மணிமேகலையைத் துறவு கொள்ளச் செய்யப் போகிறாள்.

இவ்வாறு கனவைச் சொல்லிவந்த கோவலன் இறுதியில் ‘கடிது ஈங்கு உறும்’ என்று கூறியுள்ளான். அதாவது, இது மதுரையிலே விரைவில் நடைபெறுமாம். கனவு காணின் அதன்படி நடைபெறும் என்ற நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டது இது. கோவலன் ஓரளவாவது இதனோடு தொடர்புடைய கனவு ஏதாவது கண்டிருக்கலாம். அல்லது, இஃதும், காப்பிய முன்னோட்டச் சுவைக்காக அடிகளால் செய்யப் பெற்ற கற்பனையாகவும் இருக்கலாம்.