பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சுந்தர சண்முகனார்


எனவே, மேற்சொன்னபடி பகலிலேதான் வானவில் தோன்றும் - என்பது புலனாகிறது. இரவில் மழை பெய்யினும் ஞாயிற்று ஒளி இன்மையால் வானவில் தோன்ற வாய்ப்பு இல்லை. எனவேதான், இரவில் வானவில் தோன்றியதாகக் கண்ட கனவு ஏதோ துன்பம் தரும் அறிகுறியாகும் என்று கருதப்பட்டிருக்கிறது.

மன்னன் இறப்பதற்கு முன் காணும் கெட்ட கனவு, பின்னர் மன்னன் இறப்பதற்கு அறிகுறியாக இருந்தமை வேறு இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது. இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் அவற்றுள் சில காண்பாம். முதலில் கம்ப இராமாயணம் வருக;

திரிசடை தான் கண்ட கெட்ட கனாக்களைச் சீதையிடம் கூறுகிறாள். அன்னாய் கேள்! இராவணனின் தலையில் எண்ணெய் பிசுபிசுக்க, கழுதை-பேய் பூட்டிய தேரின்மேல் சிவப்பு உடை உடுத்து எமன் இருக்கும் தென்புலம் அடைந்தான். இராவணனின் மக்களும் சுற்றமும் மற்றவர்களும் தென்புலம் சென்றனர்- திரும்பவில்லை. இராவணன் வளர்த்த வேள்வித் தீ அணைந்து விட்டது. அவ்விடத்தில் கறையான் கூட்டம் மிக்கிருந்தது. தூண்டா மணி விளக்கு தூண்டாமலேயே திடீரெனப் பேரொளி வீசிற்று. இராவணனது அரண்மனை இடியால் பிளவுபட்டது.

இன்னும் கேள்! ஆண்யானைகளே யன்றிப் பெண் யானைகளும் மதம் பிடித்தன. கொட்டப்படாமலேயே முரசு தானாக முழங்கிற்று. முகில் கூட்டம் இல்லாமலேயே வானம் வெடிபட இடித்தது. விண்மீன்கள் உதிர்ந்தன. பகல் இல்லாத இரவில் ஞாயிறு ஒளி வீசுவது போல் தோன்றியது. ஆடவர் சூடிய கற்பக மாலைகள் புலால் நாற்றம் வீசின. தோரணங்கள் அறுந்தன. யானைகளின் மருப்புகள் ஓடிந்தன. (பூரண) நிறை குடத்து நீர் கள்ளைப்