பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. நிமித்தம்

நிமித்தம் என்பது சகுனம். பின்னால் நிகழ உள்ள நன்மையையோ அல்லது தீமையையோ முன் கூட்டிக் குறிப்பால் அறிவிக்கும் குறி (அறிகுறி) நிமித்தம் எனப்படும். இந்த அறிகுறிகளை அறிந்து விளக்குபவனுக்கு நிமித்திகன் (சகுனி) என்ற பெயர் வழங்கப்படுகிறது. அரசவையில் நிமித்திகன் ஒருவன் இருப்பதுண்டு. நிமித்தம் என்னும் பொருளில் ‘சொகினம்’ என்னும் சொல் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ளது.

“ஆடமைத் தோளி விரிச்சியும் சொகினமும்

வேறு படஅஞ்சி விதிப்புற் றன்று” (264 - கொளு)

என்பது பாடல். 310 ஆம் கொளுவின் பழைய உரையிலும் இது ஆளப்பட்டுள்ளது.

“உயர்ந்த மூங்கிலன்ன தோளினாள், சொகின விகற் பத்தாலே வடித்த வேலினையுடைய தலைவன் வாரா தொழிய அதற்கு அழிந்தது” — என்பது உரைப்பகுதி.

தொல்காப்பியம், பதிற்றுப் பத்து, புறப்பெருள் வெண்பாமாலை முதலிய நூல்களில் ‘உன்னம்’ என்னும் பெயரும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. பாடல்கள்:

“உடல்வேந் தடுக்கிய உன்ன நிலையும்”

(தொல்-பொருள்- புறம்-5:8)


“தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
புன்கால் உன்னம் சாய...”

(பதிற்றுப்பத்து - 40:16, 17)