பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சுந்தர சண்முகனார்


வேட்டுவ வரி

பகைவரின் ஆனிரையைக் கவர்ந்துவர மறவன் ஒருவன் வெட்சி மலர்சூடிப் புறப்பட்டான். கொற்றவையின் நோக்கும் அவனுக்குக் கிடைத்தது. இதனால், பகைவர் ஊரில் காரி (கரிக் குருவி) குரல் எழுப்பிப் பகைவர்க்கு நேர விருக்கும் கேட்டினை அறிவித்ததாம். பாடல்:

“உட்குடைச் சீறுர் ஒருமகன் ஆனிரை
      கொள்ள உற்ற காலை
வெட்சி மலர் புனைய வெள்வாள்
     உழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர் புனைய வெள்வாள்
     உழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுள் காரி கடிய குரலிசைத்துக்

     காட்டும் போலும்” (12)

காரி (கரிக்குருவி) போன்ற கூவக் கூடாத பறவைகள் கூவுவதும் தீய நிமித்தமாம்.

கொலைக் களக் காதை

வெளியே செல்லுங்கால் மாடு முட்டவரினும் அது தீய நிமித்தமாம். கோவலன், கண்ணகியிடமிருந்து ஒரு சிலம்பைப் பெற்றுக் கொண்டு, கடைத்தெருவில் போய் விற்பதற்காக மாதிரி வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியில் செல்லலானான். அப்போது ஒரு காளைமாடு அவனை முட்ட முயன்றது. எப்படியோ தப்பித்துக் கொண்டான். இவ்வாறு மாடு மறித்து முட்ட வந்தது தீய சகுனம் என்பதை அவன் அறியவில்லை. அதை அறியும் குலத்தினன் அல்லன் அவன். எனவே, வீட்டிற்குத் திரும்பி வராமல் தொடர்ந்து கடைத்தெருவிற்குச் சென்று, கொலைக் குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். பாடல்: