பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

95



ஒழுங்கும் இசை ஒழுங்கும் உடைய வாரப் பாடலை அளவறிந்து நிறுத்த வல்லவனாதல்.

7. எழுத்துகள் சிதையாமல், எழுத்தை எழுத்தாக இலக்கணப்படிக் குற்றமின்றி இசைத்துக் காட்டல்-முதலியன குழலாசிரியன் இயல்புகளாம்.

7. யாழ் ஆசிரியன் இயல்பு

1. பதினான்கு கோவை பொலிந்து பாடல் இயல்புக்கு ஒத்திருத்தல்.

2. ஏழு பாலையினையும் இணை நரம்பாகத் தொடுத்து நிறுத்தல்.

3. பன்னிரு முறை திரித்துப் பன்னிரு பாலை பிறப் பித்தல்.

4 பெண்டிர்க்கு உரிய தானமாகிய பதினாறு கோவையிலே பொருந்தக் கூட்டல்.

5. எல்லாப் பாலைகளையும் ஒழுங்குறப் பிறப்பித்தல்.

6. வலிவு - மெலிவு - சமன் எனப்படும் தான நிலை அறிதல்.

7. நரம்படைவு கெடாமல் பண் நீர்மை குன்றாமல் புணர்க்க வல்லவனாதல்.

8. புணர்ப்பிற்கு அமைந்து எழுத்துகளால் இசை செய்தல் - முதலியன யாழ் ஆசிரியன் இயல்புகளாம்.

8. அரங்கின் இயல்பு

1 நிலம்:

1. நிலக் குற்றம் நீங்கிய இடத்தில் அரங்கு அமைத்தல்.

2. தெய்வத் தானம், பள்ளி, அந்தணர் இருக்கை, கூவம், குளம், கா ஆகியவற்றை அண்மையில் உடைத்தாதல்.