பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

காந்தி மகான் 1930 ஏப்ரலில் உப்பு சத்தியாக்கிரகம் செய்வதற்காகத் தண்டி யாத்திரை புறப்பட்டார்.காந்திஜியைப் போலவே ராஜாஜியும் திருச்சியிலிருந்து சில சத்தியாகிரகிகளை அழைத்துக் கொண்டு வேதாரண்யத்துக்கு உப்பு காய்ச்சப் புறப்பட்டார்.நாடெங்கும் உப்பு சத்தியாக்கிரக இயக்கம் பெரும் எழுச்சியை உண்டாக்கியது.ஆயிரமாயிரம் தேசபக்தர்கள் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை புகுந்தார்கள்.

காமராஜும் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். அது வரை பல போராட்டங்கள், இயக்கங்கள், கிளர்ச்சிகளில் தீவிரப் பங்கு கொண்டு வேலை செய்து வந்த காமராஜைச் சும்மா விட்டு வைத்திருந்த போலீசார் அவர் உப்பு சத்தியாக்கிரகம் செய்த உடனே கைது செய்து இரண்டு வருடச் சிறைத் தண்டனையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.

காமராஜ் சிறைக்குச் செல்வதில் அவருடைய குடும்பத்தினருக்குத் துளியும் விருப்பமில்லை. காங்கிரஸ் வேலைகளில் ஈடுபடவேண்டாம். சிறைக்குப்போக நேரிடும் என்று அவர்கள் அவரை ஏற்கெனவே எச்சரித்திருந்தார்கள். அவர்கள் பேச்செல்லாம் காமராஜ் காதிலேயே விழவில்லை.

‘உப்பு சத்தியாக்கிரகம் செய்து காமராஜ் இரண்டு வருடச் சிறை வாசம் பெற்று விட்டார்’ என்ற செய்தியைக் கேட்டதும் அவருடைய பாட்டி திருமதி பார்வதி அம்மாள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். அந்த அதிர்ச்சி காரணமாக அவர்தம் சுய நினைவை இழந்ததுடன் பேசும் சக்தியையும் இழந்து விட்டார்.

100