பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமரசப் பேச்சு வார்த்தைகளால் பலன் எதுவும் கிட்டவில்லை. அதுமட்டுமல்ல. மகாத்மாஜி லண்டனில் இருந்த போதே காங்கிரசை நசுக்கும் வேலைகளில் இங்குள்ள பிரிட்டிஷ் சர்க்கார் ஈடுபட்டு விட்டது.காந்திஜி திரும்பி வந்ததும் காங்கிரஸ்காரர்களைப் பிரிட்டிஷார் சிறையில் தள்ளினார்கள்.காமராஜ் மீது ஜாமீன் வழக்குத் தொடுத்தார்கள்.காங்கிரஸ்காரர்கள் ஜாமீன் கொடுப்பது வழக்கமில்லையாகையால் காமராஜ் அதற்கு மறுத்து விட்டார். இதனால் ஒரு வருட காலம் அவர் சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது.

காமராஜைக் கைது செய்து வேலூர்ச் சிறைக்குக் கொண்டு போனார்கள். அக்காலத்தில் வேலூரிலும், கடலூரிலும்தான் அரசியல் கைதிகளை வைத்திருப்பது வழக்கம். பயங்கரச் சதி வழக்குகளில் ஈடுபட்ட சில கைதிகளும். இந்தப் பந்தோபஸ்து கைதிகளுடன் அப்போது சேர்த்து வைக்கப் பட்டிருந்தார்கள். இதனால் அகில இந்தியாவிலிருந்தும் வந்திருந்த அரசியல் கைதிகளுடன் பழகும் வாய்ப்பு எல்லாக் கைதிகளுக்கும் கிட்டியது. இந்தக் கூட்டுச் சிறை வாழ்க்கையின் பயனாக பின்னால் இந்தியாவெங்கும் பல சதியாலோசனை வழக்குகள் தோன்றின.

வேலூர்ச் சிறையில் அச்சமயம் பகத்சிங் வழக்கில் சம்பந்தப்பட்ட ஜயதேவ் கப்பூர், கமல்நாத் திவாரி முதலியவர்கள் இருந்தார்கள். சிறைச்சாலையில் எல்லாருடனும் சுமுகமாகப் பழகும் சுபாவம் காமராஜுக்கு உண்டு. அரசியல் கொள்கையில் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுடன் கலந்து பழகக் காமராஜ் தயங்க மாட்டார்.

இதன் விளைவாக 1933-இல் 'சென்னைச் சதியாலோசனை வழக்கு' என்ற ஒன்று ஏற்பட்டது. அதற்கு 'சர்வ மாகாணச் சதியாலோசனை' என்று பெயரிட்டார்கள். வேலூர்ச் சிறையில் இருந்த எல்லா மாகாணத்தலைவர்களையும் அதில் சேர்த்தார்கள்.

அந்த வழக்கின் விசாரணையின் போது சதியாலோசனைக்காரர்களுக்கு வேண்டிய ஆயுதங்களுக்குக் காமராஜ் பணம் கொடுத்தார் என்று அப்ரூவர் சொன்னார். ஆனாலும் போதிய ருசு இல்லை என்பதால் காமராஜைக் கைது செய்யவில்லை.

102