பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களிலும் காமராஜ் அவருடைய ஆசானாக மாறி யோசனை கூறவோ, மீறிப் போனால் கண்டிக்கவோ ஒருபோதும் தவறியதில்லை. ஒரு சின்ன உதாரணம்:

1940-ஆம் ஆண்டில் சத்தியமூர்த்தி சென்னை நகரின் மேயராக இருந்த போது பூண்டி நீர்த் தேக்கத்துக்கு அப்போது சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் அஸ்திவாரக்கல் நாட்டினார். மேயர் என்ற முறையில் திரு. சத்தியமூர்த்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அச்சமயம் திரு. காமராஜ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராயிருந்தார்.

வெள்ளைக்காரர்கள் பங்கு கொள்ளும் எந்த விழாவிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் அப்போது ஒரு கட்டுப்பாடு விதித்திருந்தது. அதை மறந்து விட்டுச் சத்தியமூர்த்தி, பூண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரிய தவறு என்று காமராஜ் கருதினார். சத்தியமூர்த்தி தம்முடைய தலைவர் என்பதற்காகக் காமராஜ் அவர் செய்த தவற்றைக் கண்டிக்கத் தவறவில்லை. சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து, "காங்கிரஸ் மேலிடத்தில் இம்மாதிரி ஒரு கட்டுப்பாடு இருக்கும் போது தாங்கள் அதை மீறி வெள்ளைக்காரர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டது பெரிய தவறு இல்லையா?" என்று கேட்டார்.

"ஆமாம் : அதற்காக என்னை என்ன செய்ய சொல்கிறாய்? நான் மேயர் என்ற முறையில் போயிருந்தேன்" என்றார் சத்தியமூர்த்தி.

"செய்தது தவறு என்பதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டார் காமராஜ்.

"காமராஜா இப்படிக் கேட்கிறார்?" என்று ஒரு கணம் சத்தியமூர்த்திக்கு ஒன்றும் விளங்கவில்லை; வேறு வழியில்லாமல் ஒரு காகிதத்தை எடுத்துத் தாம் செய்தது தவறுதான் என்று எழுதி மன்னிப்புக் கோரிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் சத்தியமூர்த்தி.

"அண்மையில் காமராஜ் இந்தத் தகவலை என்னிடம் கூறிய போது, "அப்புறம் என்ன செய்தீர்கள்?" என்று தான் கேட்டேன்.

20