பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இதைப் பற்றி மேலிடத்தில் அப்போது சத்தியமூர்த்தியின் பேரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்று என்னைக் கேட்டார்கள். 'மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்திருக்கிறேன்' என்று அவர்களிடம் சொன்னேன்" என்றார் காமராஜ். "சரி, அந்தக் கடிதம் இப்போது எங்கே இருக்கிறது?" என்று நான் கேட்ட போது, 'வீட்டில்தான் இருக்கிறது. எங்காவது பெட்டிக்குள் இருக்கும். தேடிப் பார்க்கணும்" என்றார்.

"சத்தியமூர்த்தியை நீங்கள் முதன் முதலாகச் சந்தித்தது எப்போது ? ஞாபகத்தில் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

"1919-இல் அவர் விருதுநகருக்குப் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்தார். அப்போது நான் ஒரு சாதாரணத் தொண்டன். அவரோடு அப்போது பேசவே முடியவில்லை. அப்புறம் நாலு வருஷம் கழித்துத்தான் அவரோடு நெருங்கிப் பழகவும், பேசவும் எனக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

1923-ஆம் ஆண்டில், திரு.சி.ஆர். தாஸ் தலைமையில் சுயராஜ்யா பார்ட்டி ஆரம்பிச்சாங்க இல்லையா? அப்ப அந்தக் கட்சியின் கொள்கை பற்றி விவாதிக்கிறதுக்காக முக்கிய தலைவர்கள் எல்லோரும் மதுரையில் கூடினாங்க. கே.ஆர். வெங்கட்ராமய்யர் இல்லத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. இப்போது அவர் இல்லை. நானும் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். சத்தியமூர்த்தி சுயராஜ்யா கட்சியின் கொள்கையை விளக்கி ரொம்பத் தெளிவாகப் பேசினார். காங்கிரஸ் சட்டசபைக்குப் போக வேண்டும் என்பதுதான் சுயராஜ்யா கட்சியின் கொள்கை, அதுதான் சத்திய மூர்த்தியின் விருப்பமாகவும் இருந்தது. அந்தக் கூட்டத்தில் பலர் சட்டசபைப் பிரவேசத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தார்கள். நான்கூட அப்போது சட்டசபைக்குப் போகக் கூடாது என்ற கட்சியைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தேன்.

அப்புறம் சத்தியமூர்த்தியுடன் அடிக்கடி தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதும், காங்கிரஸ் பிரசாரம் செய்வதுமே என் முழு நேர வேலை ஆயிற்று.

21