பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டும் என்பதில் இந்து சீனிவாசனும், இன்னும் சிலரும் குறியாக இருந்தார்கள். இந்து சீனிவாசன் சத்தியமூர்த்தியை அணுகி, அவர் நிற்பதாக இருந்த சர்வகலாசாலைத் தொகுதியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். சத்தியமூர்த்தி ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தார்.

ஆனால் ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவருடைய மந்திரி சபையில் சத்தியமூர்த்திக்கு இடம் தரவில்லை. கடைசி வரைக்கும் சத்தியமூர்த்திக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்று சொல்லிக் கொண்டிருந்த ராஜாஜி அவரை மந்திரியாகப் போடாமலே மழுப்பிவிட்டார்.

பத்திரிகையில் மந்திரிகள் பேர்ப் பட்டியல் வந்த போது அந்தப் பட்டியலில் சத்தியமூர்த்தியின் பெயரைக் காணாமல் எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாயிருந்தது. வருத்தப்பட்டு என்ன செய்வது! பாவம், சத்தியமூர்த்தி, ஒண்ணும் தெரியாத அப்பாவி! அவருக்கு இது பெரிய ஏமாற்றம்.

"எந்தப் போலீஸ்காரர்கள் காங்கிரஸ்காரர்களைத் தடியால் அடித்தார்களோ அதே போலீஸாரைக் கதர் குல்லாய்க்குச் சலாம் போடும்படி வைக்கிறேன்னு சத்தியமூர்த்தி அடிக்கடி மீட்டிங்கில் பேசுவார். பேசியபடி தடியால் அடித்த போலீஸ்காரர்களைக் காங்கிரஸ்காரர்களுக்குச் சலாம் போடவும் வைத்தார். ஆனால் அந்தப் போலீஸ்காரங்க கதர்க் குல்லாய் அணிந்த சத்தியமூர்த்திக்கு மட்டும் சலாம் போடவில்லை. அந்த கெளரவத்தைச் சத்தியமூர்த்தி அடையாமல் போனது எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தந்தான்.

உப்பு சத்தியாகிரகத்தின் போது திருச்சி, வேலூர், அலிபுரம் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் தேசபக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது சிறையிலுள்ள தொண்டர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்தோம்.

விடுதலையாகி வெளியே போனதும், திரு. சத்திய மூர்த்தி அவர்களையே தலைவராக்க வேண்டும் என்று நான் வெளியிட்ட யோசனையைத் தொண்டர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

23