பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எளிதில் நடந்துவிடக் கூடிய காரியமல்ல என்கிற பயம் என் மனத்தில் இருந்தது. தலைவரும், நானும் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று, கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். திரு. சத்தியமூர்த்தி அங்கத்தினர்கள் எல்லோரையும் அழைத்து, ‘என்னிடம் உங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டார். இருக்கிறது' என்று அவர்கள் பதில் கூறியும் சத்தியமூர்த்திக்குத் திருப்தி ஏற்படாததால், 'இப்படிச் சொன்னால் போதாது. மீளுட்சி சுந்தரேசுவரர் சாட்சியாக என்னிடம் நம்பிக்கை இருக்கிறது என்று கூறி ஞல்தான் நம்புவேன்' என்றார்.

அவர் கேட்டுக் கொண்டபடியே எல்லோரும் உறுதி அளித்தனர். அதன் பிறகே அவர், 'உங்களுக்கு எந்தவித அபிப்பிராய பேதம் இருந்தபோதிலும் குமாரசாமி ராஜாவையே நீங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது தான் என் விருப்பம்' என்றார்.

திரு. சத்தியமூர்த்தியின் விருப்பப்படி குமாரசாமி. ராஜாவையே தேர்ந்தெடுத்தார்கள்.

1936-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்த போதும், அதற்கு முந்திய வருஷங்களில் படேலும், ராஜேந்திர பிரசாத்தும் இங்கு வந்திருந்த போதுதான் சத்திய மூர்த்திக்குத் தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மேலிடத்தார் அறிந்து கொண்டார்கள்.

வல்லபாய் படேலும், அவருடைய மகள் மணிபென் படேலும் இங்கே வந்திருந்த சமயம், சத்தியமூர்த்தியும் அவர்களுடன் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. சத்தியமூர்த்திக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமலிருந்தும் பயணத்தை ரத்து செய்யவில்லை. அவர்கள் மூவரும் பயணம் செய்த ரயிலில் படேலுக்கும், அவர் மகளுக்கும் கீழ் 'பர்த்’தை ரிசர்வ் செய்து விட்டு, சத்தியமூர்த்திக்கு மட்டும் மேல் பர்த்தில் இடம் போட்டிருந்தார்கள். அதைக் கண்ட படேல் தம் மகளை 'அப்பர் பர்த்'தில் படுத்துக் கொள்ளச் சொல்லி, சத்தியமூர்த்திக்குக் கீழே இடம் தரும்படி கேட்டுக் கொண்டார்.

25