பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்புறம் 1939 கடைசியில் மாகாணக் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்திய மூர்த்தியும் போட்டியிட்டாங்க இல்லையா? அந்தப் போட்டியில் வகுப்பு வாதம் காரணமாகத் திரு. சத்தியமூர்த்தி தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி, அன்றிரவு என்னைப் பார்த்து, ‘காமராஜ், அடுத்த வருஷம் உன்னைதான் காங்கிரஸ் தலைவனாகத் தேர்தலுக்கு நிறுத்தப் போகிறேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வகுப்பு வாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி. நீ தலைவனாக இரு. நான் உனக்குக் காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன்’ என்றார்.

அதற்கு இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நான் பதில் கூறினேன்.

அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன். இந்த முடிவு நிச்சயமானதுதான் என்று உறுதியாகக் கூறிய சத்தியமூர்த்தி அவர்கள், தாம் கூறியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார். பலத்த போட்டி இருந்தபோதிலும் சத்தியமூர்த்தியின் தலைமையில், ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய வெற்றி சத்தியமூர்த்திக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. அந்த ஆண்டு நான் தலைவராக இருந்த போது, அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு ஆலோசனை கூறி, என்னைப் பெருமைப்படுத்தியதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்" என்றார் காமராஜ்.

“அப்போதுதானே சி.பி. சுப்பையா உங்களை எதிர்த்துநின்று தோற்றுப் போனார்?” என்று கேட்டேன்.

“ஆமாம்: அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன் என்றார்” காமராஜ்.

26