பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜாஜி தம் கருத்து என்ன என்பதைச் சொல்லவில்லை. பிராமணர் அல்லாதவர் ஒருவர் தான் தலைவராக வர முடியும் என்றால் தமக்கு வேண்டிய ஒருவர் தலைவராக வரட்டுமே என்று ராஜாஜி எண்ணினாரோ என்னவோ? தலைவர் தேர்தல் விஷயமாகத் தம்மைப் பார்க்க வந்த போது, "சி.பி. சுப்பையாவையே நிறுத்தி வைக்கலாமே!” என்ற யோசனையை வெளியிட்டார் ராஜாஜி. அப்போது காமராஜை நிறுத்தி வைப்பது பற்றி ராஜாஜியிடம் சத்தியமூர்த்தி என்ன கூறினார் அதற்கு ராஜாஜி என்ன பதில் கூறினார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், ராஜாஜி குறிப்பிட்ட சுப்பையாவைத் தாம் ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டு திரும்பி வந்தார் சத்தியமூர்த்தி.

இதற்குள் காமராஜும் அவரைச் சேர்ந்தவர்களும் காமராஜின் வெற்றிக்காக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது சத்தியமூர்த்தி சென்னை நகர மேயராக இருந்தார். அவர் காமராஜை அழைத்து: “சி.பி. சுப்பையாவைப் போடும்படி ராஜாஜி சொல்கிறார், நானும் சரி என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன். நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

"நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சுப்பையா நிற்பதில் எனக்கு இஷ்டமில்லை. சுப்பையாவுக்குப் பதிலாக வேறு யார் நின்றாலும் எனக்குச் சம்மதந்தான். இல்லையென்றால் நானே தான் நிற்கப் போகிறேன்" என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார் காமராஜ்.

சத்தியமூர்த்தியால் அதற்குமேல் ஒன்றும் பேச முடியவில்லை, ‘சரி, உன் இஷ்டப்படியே செய்’ என்று கூறிவிட்டார். எனவே காமராஜும், அவருக்கு எதிராக சி.பி. சுப்பையாவும் போட்டி போடும்படி ஆயிற்று. அந்தத் தேர்தலில் சுப்பையாவுக்கு 100 வோட்டுக்களும். காமராஜுக்கு 103 வோட்டுக்களும் கிடைத்தன. காமராஜ் மூன்று வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பதவியேற்றார். தலைவர் காமராஜுக்குக் காரியதரிசியாக அமர்ந்து சத்தியமூர்த்தி துணைபுரிந்ததும் அந்த ஆண்டில்தான்.

28