பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1919இல் அரசியல் வாழ்க்கையில் ஒரு சாதாரணத் தொண்டனாக விருதுநகரிலிருந்து புறப்பட்ட காமராஜ் இருபது ஆண்டுகள் கழித்துக் காங்கிரஸ் தலைவராக வந்தது காங்கிரஸ் வரலாற்றிலேயே ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது.

காமராஜ் தலைவராக இருந்தபோதிலும், தொண்டனாக இருந்தபோதிலும் சுதந்திரம், ஜனநாயகம், காந்தீயம் ஆகிய உயர்ந்த லட்சியங்களை ஒரு போதும் மறந்ததில்லை. நியாயம், நேர்மை இவ்விரண்டுக்கும் மாறான கருத்துக்களை அவர் எப்போதும் ஜீரணம் செய்து கொண்டதும் கிடையாது. நியாயம், கொள்கை என்று வரும்போது அவற்றை நிலைநாட்ட காந்திஜி, நேருஜி, பட்டேல் போன்ற பெருந்தலைவர்களோடு அவர் வாதாடத் தயங்கியதுமில்லை.

ஒரு சமயம் காமராஜ் தமிழக முதலமைச்சராக இருந்தபோது, டாக்டர் சுப்பராயன் தம்முடைய மகன் மோகன் குமாரமங்கலம் ஹைகோர்ட் நீதிபதியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் ஆசைப்பட்டதற்குக் காரணம் மோகன் குமாரமங்கலம் பதவி காரணமாகத் தம்முடைய கம்யூனிஸக் கொள்கைகளை விட்டு விடலாம் என்று கருதினார். அப்பொழுது பிரதம நீதிபதியாக இருந்த ராஜமன்னார் அவர்களும் மோகன் குமார மங்கலத்தை நீதிபதியாக நியமிக்க தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து முதலமைச்சர் காமராஜுக்குச் சிபாரிசுக் குறிப்புடன் ஃபைலை அனுப்பி வைத்தார். காமராஜும் சுப்பராயனும் நெருங்கிய நண்பர்கள்தான். ஆனாலும் தாம் இந்தச் சிபாரிசை ஏற்று. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக அமர்ந்தால் கோர்ட்டில் வழங்கப்படும் நியாயத்துக்கு அது இடையூறாகப் போய்விடும் என்பது காமராஜின் பயம். அத்துடன் திரு. மோகன் குமார மங்கலம் இளைஞராக இருப்பதால் சீக்கிரமே பிரதம நீதிபதியாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு கம்யூனிஸ்ட் பிரதம நீதிபதியாக ஆகும் அளவுக்கு வாய்ப்புத் தேடித் தரும் ஒரு சிபாரிசைத் தம்மால் அங்கீகரிக்க முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில்

29