பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைமை நீதிபதி ராஜமன்னாரால் எதுவும் செய்ய இயலவில்லை. முதலமைச்சருக்கும் தலைமை நீதிபதிக்கும் நீதிபதிகள் நியமன விஷயத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அந்தப் பிரச்னையை ஆராய்ந்து முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. அப்பொழுது நேருஜி மந்திரி சபையில் பண்டிதபந்த் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தார், குமாரமங்கலம் நியமனம் சம்பந்தமான ஃபைல் பந்த்திடம் போயிற்று. பந்த்துக்கும் இந்த நியமனம் சரியில்லை என்றே பட்டிருக்க வேண்டும். ஆனாலும் நேருஜியிடம் இதை எடுத்துச் சொல்வதற்கு முன்னால் பந்தி காமராஜை நேரில் சந்தித்துப் பேச, விரும்பினார். அப்போழுது வேறு காரியமாக டில்லிக்குப் போயிருந்த காமராஜிடம் இதைப்பற்றி விசாரித்தார் பந்த்.

“கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரை ஹைகோர்ட் நீதிபதியாகப் போடுவதில் எனக்கு இஷ்டமில்லை. நியாயம் கெட்டுப் போகும்” என்று தம் கருத்தை எடுத்துச் சொன்னார் காமராஜ். பந்த்துக்கும் அது சரியாகவே பட்டது. இது சம்பந்தமாக நேருஜியும் அப்பொழுது காமராஜைப் பார்த்துப் பேசினார். காமராஜ் இதே கருத்தைத்தான் நேருஜியிடமும் எடுத்துச் சொன்னார்.

“சரி, மோகன் குமாரமங்கலத்தை நீதிபதியாகத் தானே போடக்கூடாது: அட்வொகேட் — ஜெனரலாகப் போடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று மேலிடத்தில் கேட்ட போது, “எனக்கு அதில் ஆட்சேபமில்லை” என்றார் காமராஜ்.

“அட்வொகேட்— ஜெனரலாகவந்தால் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற ஆட்சேபம் இல்லையா?” என்று திருப்பிக் கேட்டார்கள்.

“சர்க்கார் தரப்பில் வழக்காட வேண்டிய கேஸ்கள் எல்லாவற்றையுமே அட்வொகேட் — ஜெனரலைக் கொண்டு தான் வாதாட வேண்டும் என்பது கிடையாது. வேறு வழக்கறிஞர்களிடம் கொடுத்தும் வாதாடலாம். அந்த உரிமை சர்க்காரிடந்தானே இருக்கிறது? எனவே, வழக்குகளின் தன்மையைப் பொறுத்து அவ்வப்போது அந்தந்தக் கேஸை யாரிடம் கொடுப்பது என்பது பற்றிச் சர்க்கார் முடிவு செய்து கொள்ளலாமே!” என்றார் காமராஜ்.

30