பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரு. மோகன் குமாரமங்கலம். நீதிபதியாக வருவதிலோ, அல்லது அட்வொகேட் — ஜெனரலாக வருவதிலோ காமராஜுக்குச் சொந்த முறையில் எந்தவிதமான ஆட்சேபமும் கிடையாது. ஆயினும் நியாயம் என்று தம் மனதுக்குப் பட்டதை எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்தபோது அதை எடுத்துச் சொல்ல வேண்டியது அவருடைய கடமை ஆகிறதல்லவா?

1940 ஆம் ஆண்டு தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்திக்குச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கிடைக்க விருந்தது. அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை. இதுபற்றி அவர் மனத்தில் ஒப்புக் கொள்ளலாமா, வேண்டாமா என்று குழப்பம் இருந்திருக்க வேண்டும். சில பெருந்தலைவர்களை அணுகி, “துணைவேந்தர் பதவியை நான் ஒப்புக் கொள்ளலாமா?” என்று யோசனை கேட்டார், “தாராளமாக ஒப்புக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள் சிலர், யார் என்ன சொன்னபோதிலும் சத்தியமூர்த்தி காமராஜைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. “காமராஜ்! இதைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“இப்பொழுது உள்ள நிலையில் இதை நீங்கள் ஏற்றுக் கொள்வது எனக்குச் சரியாகப் படவில்க. காரணம், இப்பொழுது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி. இந்த ஆட்சிக்கு எதிராக நாம் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சர்க்கார் ஏற்பட்டு, அந்தச் சர்க்கார் மூலமாக தங்களுக்கு இந்தப் பதவி கிடைத்தால் அது நமக்குப் பெருமையாயிருக்கலாம்” என்றார் காமராஜ்.

“இது பொலிட்டிக்கல் அப்பாயிண்ட்மெண்ட் இல்லையே?” என்றார். சத்தியமூர்த்தி.

“இருக்கலாம். ஆனலும் சர்க்காரின் தொடர்பு இருக்குமே! அத்துடன் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது. அதில், நீங்கள் கலந்து கொள்ளாமல் இந்தத் துணைவேந்தர் பதவியை ஏற்றுக்

31