பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில விஷயங்களைச் சேர்த்து ஆலோசிப்பதும் உண்டு. அவர் எப்போதும் என்னுடன் இருந்தால் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் நான் எதுவும் செய்கிறேன் என்று அர்த்தமா, என்ன?” என்றார் காமராஜ்.

“தங்களை எதற்குப் பந்தோபஸ்துக் கைதியாக்கி வேலூர்ச் சிறைக்குக் கொண்டு போனார்கள்?”

“அதுவா? அப்ப மெட்ராஸிலே ஆர்தர் ஹோப் என்னும் வெள்ளைக்காரன் கவர்னர் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். யுத்த நிதிக்குப் பண வசூல் செய்யறதுக்காக அவன் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்துகிட்டிருந்தான். நான் அவனுக்கு முன்னாடியே ஊர் ஊராப் போய் யுத்த நிதிக்குப் பணம் கொடுக்கக்கூடாதுன்னு பிரசாரம் செய்துட்டு வந்துட்டேன். அதனாலே ஹோப்புக்குப் பணம் வசூலாகல்லே, இதுக்கு என்ன காரணம்னு விசாரித்தான் போல இருக்கு. காரணம் தெரிஞ்சதும் என்னைப் பாதுகாப்புக் கைதியாக்கி ஜெயில்லே கொண்டு வைக்கும்படி உத்தரவு போட்டிருக்கான்.”

“ஹோப்தான் உங்களை அரெஸ்ட் பண்ணச் சொன்னார்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?”

“அப்போ பாத்ரோன்னு ஒரு போலீஸ் ஆபீசர் இருந்தார். நல்ல மனுஷன். தேச பக்தி உள்ளவர், தேச பக்தர்களுக்கெல்லாம் தன்னால் முடிஞ்ச அளவு உதவி செய்வார். அவரை அப்போ ராமநாதபுரம் ஜில்லா சூப்பரின்டென்ட்டா மாத்திட்டாங்க. போற வழியிலே அவர் விருது நகரிலே இறங்கி, என் வீட்டுக்குப் போய் என் தாயாரைப் பார்த்துப் பேசிவிட்டு, ‘அம்மா! என்னையும் உங்க மகன்னு நினைச்சுக்குங்கம்மா’ன்னு சொல்லிவிட்டுப் போனாராம். அப்புறந்தான் எனக்கு இந்தச் சங்கதியெல்லாம் தெரிஞ்சுது.”

“ஆனந்த விகட்னில் அப்போது துணை ஆசிரியராயிருந்த கல்கி சத்தியாக்கிரகம் செய்யணும்னு உங்ககிட்ட வந்தாரா?”

“ஆமாம், வந்தாரே! நல்லா ஞாபகம் இருக்குதே? வாசன் கூட அவருக்குச் சத்தியாக்கிரகம் செய்யப் பர்மிஷன் கொடுக்கல்லேன்னு சொன்னதாக ஞாபகம்.”

“கல்கியைப் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?”

34