பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்து சீனிவாசனுக்குச் சொந்தமாயிருந்தது. அவருக்கும் காங்கிரஸ்லே ரொம்பப் பற்றுதல். அது பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு பில்டிங்கும் இருந்தது. அந்த இடத்தை அவர் ஆக்ஷன்லே எடுத்திருந்தார். அந்த விலைக்கே காங்கிரசுக்குக் கொடுத்துடறேன்னு சொன்னார். ஆனால், அதை வாங்கறதுக்குப் பதினைந்தாயிரம் ரூபாய் குறைஞ்சது.வாசனைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லிப் பதினைந்தாயிரம் கடனாக் கேட்டேன். காதும் காதும் வெச்சாப்பலே உடனே ஒரு செக் எழுதி அப்பவே கொடுத்துட்டார். அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்தக் கடனைத் திருப்பி கொடுத்துட்டேன்.”

“அவரை ஏன் எந்த எலெக்ஷனிலும் நீங்க நிற்க வைக்கல்லே?”

“அவரை எலெக்ஷன்லே நிற்கச் சொல்லிப் பலமுறை கேட்டுக்கிட்டேன். அவர்தான். பிடிவாதமா முடியாதுன்னுட்டார். கடைசியாக வற்புறுத்தி ராஜ்ய சபாவுக்குப் போட்டோம்.”

“பாதுகாப்புக் கைதியாக எத்தனை மாசம் ஜெயில்லே இருந்தீங்க?”

“நாற்பத்தொண்ணு நவம்பர்லே வெளியே வந்துட்டேன்.மொத்தம் எத்தனை மாசம்னு கவனத்திலே இல்லே.”

“உங்களை விருதுநகர் முனிசிபல் சேர்மனாகத் தேர்ந்தெடுத்தது அப்பதானே?”

“ஆமாமாம், நான் ஜெயிலிலிருந்து வந்ததும் விருது நகர் போனேன். நான் சிறையிலே இருந்தபோது என்னைச் சேர்மனாத் தேர்ந்தெடுத்துட்டாங்க. நான் போனதும் என்னைக் கூப்பிட்டுச் சேர்மன் நாற்காலியிலே உட்காரச் சொன்னாங்க. நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு ‘சேர்மன் பதவி’ எனக்கு வேண்டாம். பார்ட்டி வேலை கெட்டுப் போய்விடும். சேர்மன் வேலை சரியாச் செய்ய முடியாது. எப்பவுமே கட்சி வேலை செய்வதில்தான் பிரியம். இந்தக் கௌரவத்தை எனக்குக் கொடுத்ததற்காக உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி’ன்னு சொல்லி ராஜிநாமா எழுதிக் கொடுத்துவிட்டு எழுந்து வந்துட்டேன்”

36