பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“ஒரு நாள் கூட பதலியிலே இல்லையா?”

“கொஞ்ச நேரந்தான் இருந்தேன். எனக்குப் பார்ட்டி முக்கியமா, பதவி முக்கியமா?”

“சத்தியமூர்த்தி உங்களோடு சிறையிலே இருந்திருக்காரா?.”

“அம்ரோட்டி ஜெயில்லே இருந்தார். நாற்பத்திரண்டு ஆகஸ்ட் போராட்டத்திலே அவரை கைது பண்ணி அமராவதிக்குக் கொண்டு போயிட்டாங்க. அப்புறம் நான், திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை எல்லோரும் அங்கே போய்ச் சேர்ந்தோம். சத்திய மூர்த்திக்கு உடல் நலம் சரியில்லாமல் ஜெயில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார். அவரைப் பார்க்கணும்னா ஜெயில்லே விடமாட்டாங்க. அதுக்காக ஏதாவது ஒரு வியாதியைச் சொல்லிகிட்டு அந்த ஆஸ்பத்திரிக்குப் போய் வருவோம். என்ன செய்யறது? ஏதோ சொல்லிட்டுப் போய் சத்தியமூர்த்தியைப் பார்த்துட்டு வருவோம். அம்ரோட்டி ஆஸ்பத்திரியில் அவர் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கிடந்தார். வெயில் தாங்காது. ரொம்பக் கடுமை. மண்டை வெடிச்சிடும் போல இருக்கும். நானும் அண்ணாமலைப் பிள்ளையும் தொட்டியிலே தண்ணியை நிரப்பி விட்டு ராத்திரியெல்லாம் தொட்டித் தண்ணியிலேயே உட்கார்ந்துக்கிட்டிருப்போம். அண்ணாமலைப் பிள்ளை ஏதாவது பாடிக்கிட்டு இருப்பார்.”

“அவர் நல்லாப் பாடுவாரா?”

“சுமாராப் பாடுவாரு ஏதாவது லாவணி கீவணி பாடிக்கிட்டிருப்பார். நான் கேட்டுக்கிட்டிருப்பேன், என்ன செய்யறது? ஜெயிலுக்குள்ளே பொழுது போவணுமில்லையா?”.

“பாவம் சிறைத் துன்பங்களோடு பாட்டுக் கேட்கிற கஷ்டம் வேறா?” என்று எண்ணிக் கொண்டேன் நான்.

37