பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூர்த்தி, காமராஜ், பக்தவத்சலம் முதலானோர் பம்பாய்க்குப் போயிருந்தார்கள்.

“வெள்ளையரே, வெளியேறுங்கள்!” என்று பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மகாத்மா குரல் கொடுத்தார். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியும் அப்படியே தீர்மானம் நிறைவேற்றியது.

அவ்வளவுதான்; மறுநாளே மகாத்மா காந்தி, நேருஜி போன்ற பெருந் தலைவர்களெல்லாம் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டார்கள். இதற்குள் யார் யாரை எங்கெங்கே கைது செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி ஒரு பட்டியலைத் தயாரித்துத் தயாராக வைத்திருந்தது.

பம்பாய்க் கூட்டம் முடிந்து ரயில் ஏறி ஊருக்குத் திரும்புவதற்குள்ளாகவே பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ் நாட்டிலிருந்து போன சத்தியமூர்த்தி முதலானவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

“உங்களை எப்ப கைது செய்தாங்க?” என்று காமராஜைக் கேட்டேன்.

“நான் முத்துரங்க முதலியார், பக்தவத்சலம், கோபால ரெட்டி, எல்லோரும் ரயிலில் வந்துக்கிட்டிருந்தோம். எனக்கு ஒரு சந்தேகம், வழியிலேயே எங்காவது என்னைப் பிடிச்சிடு வாங்களோன்னு. ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாலே தமிழ் நாடு பூராவும் சுற்றிப் போராட்டத்தை எப்படி நடத்தணுங்கிறதைப் பற்றி அங்கங்கே உள்ளூர்க் காங்கிரஸ்காரங்க்கிட்டே பேசிடணும்னு நினைச்சேன். அதுக்குள்ளே அரெஸ்ட் ஆயிடக் கூடாதுங்கிறது என்னுடைய பிளான்”.

சஞ்சீவ ரெட்டியோடு குண்டக்கல் வரைக்கும் போய், அங்கிருந்து பெங்களூர் மார்க்கமா ஆந்திராவுக்குப் போய், சஞ்சீவ ரெட்டியோடு இரண்டொரு நாள் தங்கி, சரியானபடி திட்டம் போட்டுக்கிட்டு, அப்புறம் தமிழ் நாட்டுக்கு வரணும்னு முதல்லே நினைச்சேன். ரெட்டியும் அவங்க ஊருக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாரு. ஆனா எனக்கு ஒரு சந்தேகம், இந்த நிலையிலே சஞ்சீவ ரெட்டியைப் பாதி வழியிலேயே கைது பண்ணிடுவாங்க, அப்ப என்னையும் போலீஸ் சும்மா விடாதுன்னு...

39