பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘சரி கைது செய்யத்த்ர்ன் வாருங்க. இனி தப்ப முடியாது. இப்ப என்ன செய்யலாம்’ என்று என்னைக் கேட்டார்.

வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு நான் உள்ளே போய்ப் படுத்துக்கிட்டேன்.

சப் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு, ‘இந்த இடம் போதாது; அவ்வளவு வசதியாயும் இல்லை. டி.எஸ்.பி. வர்றார். அவர் தங்கறதுக்கு இந்த இடம் சரியாயிருக்குமான்னு பார்க்கத்தான் வந்தேன்’னு சொல் லிட்டுப் போயிட்டார். அப்புறத்தான் கலியாணராமய்யருக்கு மூச்சு வந்தது.

அன்று மாலேயே நானும் கலியாணராமய்யரும் கண்ணமங்கலம் ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிட்டோம். அங்கிருந்து வேலூர், தஞ்சாவூர், திருச்சி. மதுரை வரைக்கும் போலீஸார் கண்ணில் அகப்படாமலேயே போயிட்டோம். அங்கங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டேன். மதுரையிலே குமாரசாமி ராஜாவைப் பார்த்துப் பேசினேன். அப்ப அவர் ஜில்லா போர்ட் பிரசிடெண்டாயிருந்தார். ஆளு மூவ்மெண்ட்லே அவ்வளவு தீவிரமா ஈடுபடல்லே.

மதுரையிலே என் வேலை முடிஞ்சதும் திருநெல்வேலி, ராமநாதபுரம் போயிட்டு, அங்கிருந்து விருதுநகருக்குப் போய் அம்மாவைப் பார்த்துட்டு. கடைசியாக மெட்ராசுக்குப் போயிடலாம்னு நினச்சேன்.

இதுக்கு இடையிலே போலீஸ்காரங்க அரியலூருக்குப் போய் என்னைத் தேடிக்கிட்டிருந்தாங்க. அப்ப காங்கிரஸ் மகாநாடு ஒன்று அங்கே ரகசியமா நடக்கப்போவதாய் போலீசுக்கு தகவல் கிடைச்சிருக்கு. நான் எப்படியும் அங்கே வருவேன், பிடிச்சுடலாம்னு போலீஸார் அங்கேபோய் உஷாரா காத்துக்கிட்டிருந்தாங்க. கடைசியாக விருதுநகருக்குப் பக்கத்திலே இருந்த ஒரு கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.அங்கே ராமசந்திர ரெட்டியாரைப் பார்த்து அவர் வண்டியிலே விருதுநகருக்குப் போனேன்.

41