பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக 1946 ஆம் ஆண்டில் காந்திஜி தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் ஒரு வார் காலம் தியாகராய நகரில் தங்கி விருந்தபோது அவரைத் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள், தமிழ் நாட்டில் மூலைமுடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள். ஆகஸ்ட் போராட்டத்துக்குப் பின் காந்திஜியின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தன. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர். ஆனாலும் காந்திஜி எப்போது சென்னை வருகிறார். எந்த ஸ்டேஷனில் அவரைச் சந்தித்து வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் காமராஜுக்குத் தெரியவில்லை. எல்லா ஏற்பாடுகளும் போலீசாருக்கு மட்டுமே தெரிந்திருந்தன.

எல்லா விவரங்களையும் போலீசார் மூடு மந்திரமாகவே வைத்திருந்தார்கள். ராஜாஜி, சர். என். கோபாலசுவாமி ஐயங்கார், இந்தி பிரசார சபா காரியதரிசி சத்திய நாராயணா போன்ற ஒரு சில முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே விவரம் தெரிந்திருந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மகாத்மாஜியை நேரில் சென்று வரவேற்கும் பொறுப்பு காமராஜிடம் இருந்தது. ஆனாலும் அவருக்கு எந்த விவரமும் தெரியாததால் நேராக இந்தி பிரசார சபைக்குப் போய் விசாரித்தார்.

44