பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜாஜி முதலியவர்கள் ஏற்கெனவே காந்திஜியை வர வேற்கப் புறப்பட்டுப் போய்விட்டார்கள் என்கிற தகவல் மட்டுமே காமராஜுக்குக் கிட்டியது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் காந்திஜி வந்து விடுவார்; அதற்குள் அவர் இறங்கும் ஸ்டேஷனைக் கண்டுபிடித்து ஆக வேண்டும். இதற்கு என்ன செய்வது? காமராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்தச் சமயத்தில் காமராஜின் நண்பரும் பத்திரிகை நிருபருமான திரு கணபதி அங்கே வந்து சேர்ந்தார். மகாத்மாஜி எந்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கப் போகிறார் என்கிற இரகசியம் பத்திரிகைக்காரர் என்ற முறையில் அவருக்குத் தெரிந்திருந்தது. கணபதி தம்முடைய காரிலேயே காமராஜரை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷனுக்குப் பறந்து சென்றார். அந்த ஸ்டேஷனில்தான் மகாத்மாவை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காந்திஜி ரயிலை விட்டு இறங்கியதும் காங்கிரஸ் தலைவர் காமராஜ் தம் கையோடு கொண்டு போயிருந்த பெரிய மாலையைப் போட்டு அவரை வரவேற்றார்.

இந்தி பிரசார சபையின் வெள்ளி விழா முடிந்ததும், மகாத்மாஜி, பழனிக்கும் மதுரைக்கும் ரயில் மார்க்கமாகவே யாத்திரையாகச் சென்றார்.

அந்தப் பயணத்தின் போது ராஜாஜியும் மகாத்மாவுக்குத் துணையாகச் சென்றிருந்தார்; காமராஜும் போயிருந்தார். காந்திஜியிடம் ராஜாஜிக்கு அதிகச் செல்வாக்கு இருந்த கரரணத்தினாலே என்னவோ, காமராஜ் அந்தப் பயணத்தின் போது சற்று ஒதுங்கியே இருந்தார்.

பழனி ஆண்டவர் சந்நிதியில்கூட ராஜாஜிக்கும், காந்திஜிக்கும் தான் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள். காந்திஜியும் ராஜாஜியும் பழனி மலைப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தபோது காமராஜும் கூடவே போய்க்கொண்டிருந்தார், பத்திரிகைக்காரன் என்ற முறையில் நானும் போயிருந்தேன். அப்போது ராஜாஜி காமராஜரைக் காட்டி, “இவர்தான் காமராஜ்: காங்கிரஸ் பிரசிடெண்ட்” என்று காந்திஜிக்கு அறிமுகப்படுத்தினார்.

45