பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்திஜி, “எனக்குத் தெரியுமே!” என்று பதில் கூறினார்.

மதுரைக்கும், பழனிக்கும் போய் வந்த பிறகுதான் காந்திஜி ‘களிக்’ (ஒரு சிறு கும்பல்) என்று காமராஜ் குழுவைக் குறிப்பிட்டார். காந்திஜி தங்களைப் பார்த்து இப்படிச் சொன்னது காமராஜுக்கும், அவரைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது. அதைத் தொடர்ந்து மதுரையில் ராஜாஜிக்கு எதிராகப் பெரிய ஆர்ப்பாட்டமும் கலவரமும் நடந்தன.

காமராஜ் மகாத்மாஜியைக் கண்டிக்கும் முறையில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை வருமாறு:

“ஹரிஜனில் தம் கையெழுத்துடன் எழுதியுள்ள மகாத்மாவின் கட்டுரை எனக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கியது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். சட்டப்படி காரியக் கமிட்டியை அமைத்தது நான்தான். ஆகவே, காந்திஜியின் குறிப்பு எனக்குத்தான் பொருந்த முடியும். சென்னையிலும் தமிழ்நாட்டிலும் காந்திஜி போகுமிடங்களுக்கெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன். எப்பொழுதும் அவர் கூப்பிடும் தூரத்தில்தான் நான் இருந்தேன். காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் பலரும் கூடவே இருந்தனர். தமிழ் நாட்டுக் காங்கிரஸ் விவகாரங்கள் பற்றிக் காந்திஜி இங்கிருந்த போது எங்களிடம் எதுவும் பேசவில்லை. அங்கே போனபின் ‘கும்பல்’ என்ற வார்த்தையை அவர் உபயோகித்துள்ளது. எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

சட்டசபை வேலைத் திட்டம் தேச சுதந்திரப் போராட்டத்தைப் பலப்படுத்துவதற்கு ஒரு சாதனம் என்பதைத் தவிர, அதில் எனக்கோ, என் சகாக்களுக்கோ அதிக நம்பிக்கை கிடையாது. என் நிலையை விளக்கி நான் பல மேடைகளில் பேசியுள்ளேன். எது என்னவாயினும் நான் சட்டசபை வேலைத் திட்டத்தில் எந்தவிதப் பதவியும் பெற ஆசைப்படவில்லை.

காந்திஜியின் கட்டுரைக்குப் பின், பார்லிமெண்டரி போர்டிலிருந்து நான் ராஜிநாமா செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஏனென்றால், இந்தச் சண்டை முழுவதும் சட்டசபைத் திட்டத்தால் ஏற்பட்டதுதான்.

46