பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.எஸ். அவிநாசிலிங்கம், சி.என்.முத்துரங்க முதலியார், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், ருக்மிணி லட்சுமிபதி ஆகிய நால்வரும், தாங்களும் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதினர். ஆனால் தேர்தலுக்கு முன் நமக்குள்ள அவகாசம் மிகக் குறுகியதாயிருப்பதால் அனைவரும் மொத்தமாக ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று அவர்கள் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். என் வேண்டுகோளுக்கிணங்கி, அவர்கள் போர்டில் இருக்கச் சம்மதித்துள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை நான் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இருபது ஆண்டுகளாக நான் விசுவாசத்துடன் பின்பற்றி வந்துள்ள தலைவர் காந்திஜி. அவரிடம் என் பக்தி இன்றும் எள்ளளவும் குறையவில்லை. என்னால் அவருக்கு வருத்தம் ஏற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே என்ற காரணத்தால்தான் நான், ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளேன். மாகாண போர்டும், மத்திய போர்டும் எந்த முடிவுகளைச் செய்தாலும் அவற்றை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்று இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உறுதி கூறுகின்றேன்.”

காமராஜின் அறிக்கையைப் படித்துப் பார்த்த காந்திஜி. மீண்டும் ஹரிஜன் பத்திரிகையில் விளக்கம் எழுதினார். ‘கிளிக்’ என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் தவறான அர்த்தம் எதுவுமில்லை என்று சமாதானம் கூறி, காமராஜ் தம்முடைய ராஜிநாமாவை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் காமராஜ், தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

அந்த ஆண்டு நடைபெறவிருந்த அசெம்பிளித் தேர்தலுக்கான பார்லிமெண்டரி போர்டில் காமராஜ், இல்லை. பார்லிமெண்டரி போர்டார் ராஜாஜியின் உதவியுடன் அபேட்சகர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனாலும் சில நாட்களுக்கெல்லாம் சூழ்நிலை சரியில்லை என்பதை அறிந்து கொண்ட ராஜாஜி தாம் காங்கிரஸ் விவகாரங்கள் எதிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு விலகிக் கொண்டார்.

47