பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்போது டாக்டர் வரதராஜுலு நாயுடு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்:

"காந்தி தர்மத்தைப் பரப்புவதிலும், காங்கிரஸ் திட்டங்களை செயல்படுத்துவதிலும் காமராஜ் தென்னாட்டிலேயே முதன்மையானவர். அவரைக் குறித்துத் தாங்கள் தவறாக எழுதியது சரியல்ல. இவ்விஷயத்தில் தாங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

காந்திஜி நாயுடுவுக்கு உடனே பதில் எழுதினார்:

"உங்கள் இஷ்டப்படியே நடந்துக் கொள்கிறேன். இத்தத் தகராறில் இனி நான் ஈடுபடுவதில்லை” என்பதே அந்தப் பதில்.

ராஜாஜியை 'ஒரு சிறு கும்பல்' எதிர்ப்பதாகக் காந்திஜி எழுதியதும் தமிழ் நாட்டில் ஒரு பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டுவிட்டது. ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் தோன்றின.

1942-இல் அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகா நாட்டில், ராஜாஜி பாகிஸ்தான் பிரிவினை குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்குச் சாதகமாகப் பதினைந்து வோட்டுக்களே கிடைத்ததால் தீர்மானம் தோற்றுப்போயிற்று. இதனால் ராஜாஜி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்தும் காரியக் கமிட்டியிலிருந்தும் ராஜிநாமா செய்து விட்டுத் தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைச் க்தந்திரமாக நின்று நடத்தினார். ராஜாஜியின் இந்தப் போக்கு தமிழ்நாடு காங்கிரஸுக்குப் பிடிக்கவில்லை; அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக நோட்டீஸ் கொடுத்தது.

இந்தச் சமயத்தில் காந்திஜி ராஜாஜிக்கு ஒரு யோசனை கூறினார். காங்கிரஸ் அங்கத்தினர் பதவி, அசெம்பிளி பதவி இரண்டையும் அவர் ராஜிநாமா செய்துவிட வேண்டுமென்பதே அந்த யோசனை. காந்திஜியின் யோசனைப்படியே அந்த இரண்டு பதவிகளையும் ராஜிநாமா செய்துவிட்டு ஆகஸ்ட் போராட்டத்தையும் எதிர்க்கத் தொடங்கினார், ராஜாஜி. இவையெல்லாந்தான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜியின்மீது கோபம் உண்டாகக் காரணங்களாயின.

48