பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1

ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நான் டில்லிக்குப் போயிருந்தபோது காமராஜ் டில்லியில் 'முகாம்' போட்டிருந்தார். அவரைப் பற்றி வேறோரு வாரப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதற்காக அவருடனேயே சில நாட்கள் தங்கியிருந்தேன். காமராஜ் அச்சமயம் முதலமைச்சர் பதவியில் இல்லை. ஆனால் 'காமராஜ் திட்டம்' காரணமாக நேருஜி. லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களிடம் அவருடைய செல்வாக்கு இமயமலை போல் வளர்ந்திருந்தது.

டி.டி.கே., அதுல்யகோஷ், எஸ்.கே. பாட்டீல் போன்றவர்கள் காமராஜைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்தார்கள்.

டி.டி.கே. இல்லத்தில் ஒரு நாள் நடந்த விருந்து ஒன்றில் அதுல்யகோஷ் காமராஜைக் கட்டிப் பிடித்து, உயரத்தில் தூக்கிப் போட்டு விளையாடிய காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது. காமராஜ் கர்ம வீரர் என்றும்,தன்னலமற்ற தியாகி என்றும், அவர் ஆட்சி நடத்திய மெட்ராஸ் ஸ்டேட் ரொம்ப ‘காம்ராஜ்' யமாயிருக்கிறதென்றும் அவர்கள் பாராட்டி பேசிக் கொண்டிருந்ததையும் மறக்கவில்லை.

5