பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9

"பிரகாசம் தம்முடைய மந்திரி சபையில் மாதவ மேனனை மந்திரியாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. அதனால்தான் காமராஜுக்குப் பிரகாசத்தின்மீது கோபம்" எனறு பலர் தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல; பிரகாசத்தின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்காகச் சிலர் அப்போது முனைந்து வேலை செய்தபோது காமராஜ் அவர்களைத் தடுத்து. "அப்படிச் செய்யக் கூடாது, பிரகாசத்தைப் பிடிக்கவில்லை என்றால், அடுத்தாற்போல் சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைமைக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. அப்போது வேறொருவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் போகிறது" என்று கூறியது தான் உண்மை.

அவர் சொன்னபடியே 1947ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைமைத் தேர்தலில் பிரகாசத்துக்குப் பதிலாக ஒமந்துார் ராமசாமி ரெட்டியாரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அந்தக் காலத்தில் சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். எனவே 1948ல் நடைபெற்ற தேர்தலில் ஓமந்துர் ராமசாமி ரெட்டியாருக்கு எதிராக பிரகாசம் மீண்டும் போட்டியிட்டார். அப்போதும் பிரகாசத்தால் வெற்றி பெறமுடியவில்லை. காரணம் ஆந்திராவைச் சேர்ந்த காளா வேங்கடராவ், சஞ்சீவ ரெட்டி போன்றவர்களே பிரகாசத்துக்கு எதிராக வேலை செய்தார்கள்.

56