பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

"ன்னிரண்டு ஆண்டுக் காலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தொடர்ந்து இருப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. 1940-இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜ் 1952 வரை மீண்டும் மீண்டும் தேர்தல் நடந்த போதெல்லாம் அவரே தலைவராகிக் கொண்டிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸில் அவருக்குள்ள செல்வாக்கும் சக்தியும் அத்தகையவையாயிருந்தன. 'காமராஜ்' என்ற மாபெருஞ் சக்தியைத் தமிழ்நாட்டில் யாரும் எதிர்த்து நிற்க முடியவில்லை. பிரகாசம், ராஜாஜி, சி.பி. சுப்பையா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ம.பொ.சி. - எல்லோருமே ஒவ்வொரு சமயங்களில் காமராஜுக்கு எதிராக நின்று வேலை செய்தவர்கள் தாம். அவர்களுடைய எதிர்ப்புக்களாலும், போட்டிகளாலும், ராஜ தந்திரங்களாலும் காமராஜ் என்னும் இமயத்தை அசைக்க முடியவில்லை. மக்களின் ஆதரவும், காங்கிரஸ் ஊழியர்களின் பக்கபலமும் காமராஜுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக இருந்து வந்தன; இருந்து வருகின்றன.

1946-இல் ஆகஸ்ட் போராட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமைக்கு நடைபெற்ற தேர்தலில் காமராஜுக்கு எதிராகத் திரு. சா. கணேசனை நிறுத்தி வைத்தார்கள். இவரைப் போட்டியிடச் செய்வதற்கு முன்னால் முத்துராமலிங்கத் தேவரைப் போட்டியிடச் செய்தால் காமராஜ் நிச்சயம் தோற்றுப் போவார் என்று சிலர் அப்போது எண்ணினார்கள். தேவர் அதற்கு இணங்க மறுத்து விட்டதால்

61