பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாரோ?" என்ற கவலையும், வேதனையும் காமராஜ் பேச்சில் வெளிப்பட்டன.

வாசலில் மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. காருக்குள் ஏறி உட்காருவதற்குள்ளாகவே தெப்பலாக மூழ்கிவிடக்கூடிய பேய் மழை. ராஜகோபாலன் சட்டென்று குடையைக் கொண்டு வந்து காமிராஜைக் காரில் ஏற்றி விட்டார்.

எனக்கும், நடராஜனுக்கும் ஒன்றும் புரியவில்லை. காமராஜுடன் போக வேண்டியதுதான, இல்லையா என்பதை யோசிக்காமலேயே நாங்களும் காரில் ஏறிவிட்டோம். காமராஜ் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. அவர் நினைப்பெல்லாம் தீன்மூர்த்தி பவனிலேயே இருந்தது.

மழையில் டில்லிப் பாதைகளெல்லாம் மூழ்கிப் போயிருந்தன. பத்தடிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது கண்ணுக்குப் புலனாகவில்லை.

கார் போய்க் கொண்டிருந்தது. கண்ணாடி கதவுகளையெல்லாம் மூடிக் கொண்டோம். நடராஜன் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். நானும், காமராஜும் பின் சீட்டில் உட்கார்ந்தோம். ஒரே மெளனம்.

ஏற்கனவே கூட்டத்துக்கு லேட்டாகப் போகிறோமே என்ற வேதனை காமராஜின் உள்ளத்தில் குழம்பிக் கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் அவருடைய அனுமதியின்றி நானும், நடராஜனும் வண்டியில் ஏறிக் கொண்டது அவருக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டது. நடராஜனும், நானும் அந்தக் கூட்டத்துக்குப் போவது கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாத காரியம். இங்கிதம் தெரியாமல் நாங்கள் வண்டிக்குள் ஏறிவிட்டோம். கொட்டுகிற மழையில் எங்களை நடு ரோட்டில் இறக்கவும் அவருக்கு மனமில்லை. நேரமோ ஒடிக் கொண்டிருக்கிறது.என்ன செய்வதென்று புரியாத நிலை.

இதுதான் அவருக்குக் கோபம்.

திடீரென்று இடி முழக்கம் போல் காமராஜ் நடராஜனைப் பார்த்துக் கர்ஜிக்க ஆரம்பித்து விட்டார்.

7