பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13

காமராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்றதால் அவருடைய வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. அதே 'முக்கால் கை'க் கதர்ச் சட்டைதான்; அதே பழைய வீடுதான்;அதே எளிய வாழ்க்கைதான். கைக்கு ஒரு 'ரிஸ்ட் வாட்ச்' வாங்கிக் கொண்டாரா? கிடையாது. சட்டைப்பை பெரியதாக இருக்கிறதே, அதில் ஒரு மணிபர்ஸ் வைத்துக் கொண்டாரா? கிடையாது. போகட்டும்; ஒரு பெளண்டன் பேனா? மூச்சு!

"இப்படிக் கைக்கடிகாரங்கூட இல்லாமல் இருக்கிறீர்களே,எப்போதாவது நேரம் தெரிய வேண்டுமானால் என்ன செய்வீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.

"கடிகாரம் எதுக்கு? யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க!” என்று பதில் கூறினர் காமராஜ்.

"முதல் மந்திரியாக இருந்தீர்களே, சம்பளம் வாங்கினீர்களே, அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன்.

“காங்கிரஸ் வேலையாக டில்லிக்குப் போய் வந்தால் நானே தான் பிளேன் டிக்கட் வாங்கிக் கொள்வேன். தாயாருக்கு மாதம் நூறு, நூற்றைம்பது ரூபாய் செலவுக்குக் கொடுப்பேன். அப்புறம் ஏது என்னிடம் பணம்?”

'காமராஜ் திட்டத்தைச் செயலில் நிறைவேற்றிய போது அவர் முதல் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். அல்லவா? அப்போது ஒரு முறை அவருடன் டில்லிக்குப் போயிருந்தேன். பிரயாணத்தின் போது அவரைக் கேட்டேன்.

75