பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"உனக்கு கொஞ்சமாவது யோசனை இருக்கிறதா? இப்போது எதற்குக் காரில் ஏறினாய்? காமிராவும் கையுமாக நீ என்னோடு அங்கே வந்தால் அங்குள்ளவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் ?”

நாங்கள் நடுநடுங்கிப் போனோம்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜை இப்படி ஒரு எக்கச்சக்கமான நிலையில் வைத்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்டேன். கார் போய்க் கொண்டே இருந்தது. சட்டென்று காமராஜ், "அதோ, அதோ நிறுத்து!"என்றார். அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு டாக்ஸி நின்று கொண்டிருந்தது. எங்களைக் கண நேரத்தில் அங்கே இறக்கி விட்டு அந்த டாக்ஸியில் ஏறிக் கொள்ளும்படிச் சொன்னார்.

நடராஜனும், நானும் 'தப்பினோம், பிழைத்தோம்' என்று பாய்ந்து ஓடி அதில் ஏறிக் கொண்டோம்.நடராஜனுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம் போலிருக்கிறது. காமராஜ் கோபத்தை அவர் பொருட்படுத்தவில்லை. "அவர் என்னைத் திட்டினால்தான் எனக்குத் திருப்தி. அவரிடம் திட்டு வாங்குவதிலுள்ள மகிழ்ச்சி எனக்கு வேறு எதிலுமில்லை!" என்று ஜாக்பாட்டில் பணம் கிடைத்தவர் போல் சிரித்துக் கொண்டே சொன்னார்.

அன்று பகல் பன்னிரண்டரை மணிக்கு மொரார்ஜிதேசாய், ஜகஜீவன்ராம், காமராஜ் மூன்று பேருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கமிட்டிக் கூட்டம் ஒன்று இருந்தது. நானும், நடராஜனும் அங்கே போய்க் காத்திருந்தோம். காமராஜ் அங்கே எங்களிருவரையும் பார்த்து விட்டுச் சிரித்துக் கொண்டே, “என்ன இங்கே வந்திருக்கிறீர்களா? சரி. இங்கேயே உட்கார்ந்திருங்கள். இதோ வந்து விடுகிறேன்' என்று ரொம்ப சாந்தமாகச் சொல்லி விட்டுப் போனார்.

"இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எரிமலையாக வெடித்த காமராஜர் இப்போது இப்படி பச்சை வாழைப்பட்டையாக மாறியிருக்கிறார்?" என்று வியந்தேன் நான்.

8