பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

காமராஜை சந்தித்துப் பேசுவதற்காக நான் டில்லியில் சில நாட்கள் தங்கியிருந்தபோது, அநேகமாகத் தினமும் அவர் வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன்.

ஒரு நாள் பேச்சு வாக்கில் பழம் பெருந் தலைவர்களைப் பற்றி அவர் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில், "ராமசாமி நாயக்கரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"சின்னப் பையனாக இருந்தபோதே நான் அவரைப் பார்த்திருக்கேன்.ஆனால் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. நேரடியாத் தொடர்பும் கிடையாது. விருதுநகருக்கு வருவார். பார்த்திருக்கேன். ரொம்ப லின்ஸியர் ஆசாமி. சரியோ தப்போ. தைரியமாகச் சொல்லுவார். செய்வார். ஐம்பத்திரண்டிலே ராஜாஜியை சப்போர்ட் பண்ணினார். அப்ப தி.மு.க. பிரிஞ்சுட்டாங்க. நாய்க்கர் பரவாயில்லே, சப்போர்ட் பண்றாரு. தி.மு.க. தான் ஆதரவு கொடுப்பது கிடையாது' என்று ராஜாஜியே என்னிடம் சொல்லியிருக்கார்."

"உங்களைக் கூட அவர் குடியாத்தம் தேர்தலின் போது சப்போர்ட் பண்ணினாரே! உங்க, ஆட்சியை 'அசல் தமிழன் ஆட்சி' என்று அவர் சொன்னார், இல்லையா?”

"ஆமாம் அவருக்கு அப்போ டி.எம்.கே. மேலே கோபம்.என்னை ஆதரிச்சதுக்கு அதுவும் ஒரு காரணம்."

"நீங்க் பதவியிலிருந்தப்போ அவர் எப்பவாவது உங்களிடம் சிபாரிசுக்கு யாரையாவது அனுப்பியிருக்காரா?"

87