பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் விருதுநகருக்குச் சென்று காமராஜின் தாயார் சிவகாமி அம்மாளைப் பார்த்துப் பேசி விட்டு வந்தேன். அப்போது பேச்சுக்குப் பேச்சு 'காமராஜ் திருமணம் செய்து கொள்ளவில்லையே' என்ற குறையை அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

"உங்க மகனைப் பற்றி நாடே பெருமைப்படுதே, அதற்காக நீங்க சந்தோஷப்படுவீங்களா! கலியாணம் செய்து கொள்ளவில்லையே என்று இப்படிக் குறைப்படுவீங்களா?" என்றேன் நான்.

"நாட்டுக்கு ராஜாவானாலும் தாய்க்குப் பிள்ளைதானே? எனக்குக் குறை இருக்காதாய்யா?" என்றார் அவர்.

"வேறு ஏதாவது குறை உண்டா உங்களுக்கு?" என்று கேட்டேன்.

“இங்கே வந்தால் ஒரு நிமிஷம் நிற்கமாட்டான்யா உள்ளே நுழையற போதே,'என்னம்மா செளக்கியமா?'ம்பான். அப்படிக்கேட்டுக்கிட்டே உள்ளே வருவானா? வந்த சுவட்டோடே, அப்படியே தெருப்பக்கமாகத் திரும்பி நடந்துகிட்டே நான் வரேம்மா'ன்னு போயிடுவான்.என் மகனை இந்த நாட்டுக்கு உழைக்க ஒப்படைச்சுட்டேன். சின்ன வயசிலேருந்தே அவன் வீடு தங்கினதில்லை. அவனுக்கு ஒரு கலியாணத்தைச் செஞ்சு. கண்ணுலே பார்த்துடனும்னு நானும் எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தேன். முடியலே. அதுதான் குறை”

“உங்கள் செலவுக்குப் பணம் அனுப்புகிறாரா?”

95