பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டு விட்டார். பணம் சம்பாதிப்பதில் அவருக்கு நாட்டமில்லை.'அரசியல் வேலையே தம்முடைய வேலை, தேச நலனே தம்முடைய நலன் என்று கருதி ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறைக்குச் செல்வதையே தொழிலாகக் கொண்டார்.

காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் போது இந்த நாட்டில் பல லட்சம் மக்கள் சிறைக்குச் செல்லத் தயாராயிருந்தார்கள்.அப்போது சிறைச்சாலைகள் நிரம்பிப் போதுமான இடமின்மையால் பிரிட்டிஷ் சர்க்கார் பலரைக் கைது செய்யாமலே விட்டு வைத்திருந்தது.இந்த நிலையில் சிறைக்குப் போகவும், விடுதலை இயக்கத்தில் ஈடுபடவும் காங்கிரஸ் தொண்டர்கள் நாடெங்கும் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் காமராஜும் ஒருவர். இந்தச் சமயம் பார்த்துக் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி விடவே, பலர் உற்சாகம் இழந்து விட்டார்கள்.ராமநாதபுரம் ஜில்லாவில் இரண்டே பேர்தான் கைதானார்கள். காமராஜ் கைதாகவில்லை.

போராட்டம் நின்று விட்டதால் ஊழியர்கள் சோர்வடைந்து விடக் கூடாது என்பதற்காக அங்கங்கே கள்ளுக் கடை மறியல் செய்யத் தொடங்கினார்கள். காந்திஜியின் நிர்மாணத் திட்டப் பணிகளில் அதுவும் ஒன்று. இந்த மறியல் வேலையினால் தொண்டர்களுக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் மதுரை நகரந்தான் கள்ளுக்கடை மறியவில் முன்னணியில் நின்றது. காங்கிரஸ்காரர்களை மறியல் செய்யும் இடங்களுக்குச் சென்று கைது செய்வதைவிட ஒரே இடத்தில் அவர்கள் எல்லாரையும் மொத்தமாக மடக்கிப் பிடித்துக் கொண்டு போய் விடுவது நல்லது என்று எண்ணினார்கள் மதுரைப் போலீசார்.இதற்காகக் காங்கிரஸ் அலுவலகத்துக்கே சென்று அங்கிருந்த காங்கிரஸ்காரர்கள் அத்தனை பேரையும் கைது செய்து லாரியில் ஏற்றிக் கொண்டு போனார்கள். போலீசார் போன சமயத்தில் காமராஜ் காங்கிரஸ் அலுவலகத்தில் இல்லை;சில நிமிடங்களுக்கு முன்னால்தான் அவர் வெளியே போய் இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது எல்லாக் காங்கிர்ஸ்காரர்களையும்

97