பக்கம்:சிவ வழிபாடு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் சைவ சமயத்தைத் தமிழ்நாட்டில் நிலைநாட்டியவர்களுள் முதன்மையானவர் திருஞானசம்பந்தர். சம்பந்தர் தஞ்சை மாவட்டத்திலுள்ள சீர்காழி என்னும் ஊரில் பிறந்தவர். இவர் தந்தை சிவபாத இருதயர். தாயார் பகவதியார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். மூன்று வயதுக் குழந்தையாக இவர் இருந்தபோது ஒருநாள் ர்ேகாழியிலுள்ள தோனியப்பர் கோயிலின் குளத்தில் குளிக்கச் சென்ற இவர் தந்தை, இவரையும் தோள்மீது எடுத்துச் சென்றார். மகனைக் குளத்தின் கரையில் அமர வைத்து, நீரில் இறங்கித் தந்தையார் மூழ்கிக் குளித்தார். தந்தையாரைக் காணாத குழந்தை தவிப்பால் அழுதார். சம்பந்தரைத் தம்முடைய ஞானக் குழந்தையாக ஏற்கச் சிவபெருமான் திருவுளங் கொண்டார். அம்மையப்பராக அங்கு தோன்றி, உமையம்மையைக் கொண்டு ஞானப்பால் ஊட்டுவித்தார். ஞானப்பால் உண்டதனால் இவர் ஞானசம்பந்தராகத் தெய்விகக் குழந்தையானார். நீரில் மூழ்கியிருந்த தந்தையார் வெளியே வந்ததும், குழந்தையின் வாயிலிருந்து பால் வழியக் கண்டார். "உனக்கு பால் கொடுத்தது யார்?" என்று கேட்ட தந்தைக்கு விடையாகத் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். அப்பாடலின் வாயிலாகத் தமக்குப் பால் கொடுத்தது அம்மையப்பரே என்பதைத் தம் தந்தையார் உணரச் செய்தார். மூன்று வயதுக் குழந்தை, இசையோடு இனிய தமிழில் பாடி இறைவனைப் போற்றிய அதிசயம் ஊர் முழுவதும் பரவியது. அந்நாள் முதல் திருஞானசம்பந்தர், தம் தந்தையார் தோள்மீது அமர்ந்தபடி சோழவள நாட்டிலுள்ள எல்லாச் சிவாலயங்களையும் வணங்கித் தேவாரத் திருப்பதிகங்களைப் பாடி வந்தார். நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர்' என்ற புகழ் பெற்றார். அந்நாளில் மதுரையை ஆண்ட மாறவர்மன் என்னும் பாண்டிய மன்னன் சமண சமயத்தைச் சார்ந்திருந்தான். அவனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயை, இவர் திருநீறு பூசிக் 138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/147&oldid=833414" இலிருந்து மீள்விக்கப்பட்டது