பக்கம்:சிவ வழிபாடு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்ந்திருந்த சமண சமயத் துறவிகளை அணுகிச் சமண சமய சாத்திரங்களைக் கற்றார். தாமும் சமணரானார். தருமசேனர் என்ற பட்டம் பெற்றார். தம்பி சமணரானதை அறிந்த திலகவதியார் வருந்தினார். தம் ஊருக்கு அருகில் உள்ள திருவதிகையில் கோயில் கொண்ட சிவபெருமானிடம் முறையிட்டார். திலகவதியாரின் வேண்டுகோளை நிறைவேற்ற இறைவன் ஒர் அற்புதத்தை நிகழ்த்தினார். பாடலிபுத்திரத்தில் இருந்த தருமசேனரைச் சூலை நோய் பற்றியது. பலவித மருந்துகளை அருந்தியும் அவ்வயிற்றுவலி தீரவில்லை. சமணர்களால் போக்க முடியாத வயிற்று வலியைத் திலகவதியார் திருநீறு கொடுத்து நீங்கச் செய்தார். திருவதிகைப் பெருமானின் திருவருள் திறத்தை உணர்ந்த நாவரசர், சிவபெருமானை வணங்கினார். தம் திருத்தொண்டராக இறைவன் ஏற்றுக் கொண்டு அருள் செய்தார். திருநாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்னும் தேவாரத் திருப்பதிகத்தை முதன் முதல் பாடித் தொழுதார். அன்று முதல் மருள்நீக்கியார் திருநாவுக்கரசராகி சைவத் தொண்டு புரிந்து வந்தார். அந்நாளில் காஞ்சிபுரத்தில் அரசனாக இருந்த சமண சமயத்தைச் சார்ந்த மகேந்திரவர்ம பல்லவன் இவர் மீண்டும் சைவரானதைக் கேள்வியுற்றான். இவரைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டும், நஞ்சு கொடுத்தும், யானையின் காலில் இடறச் செய்தும், கற்பாறையில் கட்டிக் கடலில் தள்ளியும் எவ்வகையாலும் கொல்ல ஆணையிட்டான். அம்முயற்சிகள் யாவற்றினின்றும் இறைவன் திருவருளால் திருநாவுக்கரசர் உயிர் பிழைத்தார். இதனை அறிந்த பல்லவ வேந்தன் சமண சமயத்தைக் கைவிட்டான். சைவ சமயத்தைத் தழுவினான். திருப்பணிகள் பல செய்தான். திருநாவுக்கரசர் பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடினார். அதிசயங்கள் பல நிகழ்த்தினார். கோயில்களை வலம் வரும் அடியவர்கள் வருந்தாதவாறு வழியில் முளைத்திருந்த புற்பூண்டுகளை உழவாரப்படை கொண்டு செதுக்கித் தொண்டாற்றினார். 141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/150&oldid=833421" இலிருந்து மீள்விக்கப்பட்டது