பக்கம்:சிவ வழிபாடு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் 'திருவாசகம்' என்னும் உருக்கமிகு தோத்திரப் பாடல்களை அருளிச் செய்தவர் மாணிக்கவாசகர். மதுரை மாநகருக்கு அருகில் உள்ள திருவாதவூரில் பிறந்தமையால் திருவாதவூரர் என்னும் பெயரைப் பெற்றிருந்தார். திருவாதவூரர் கல்வி கேள்விகளில் சிறந்தவர். எனவே, அந்நாளில் பாண்டிய நாட்டை ஆண்டிருந்த அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக விளங்கினார். ஒரு முறை தன் குதிரைப் படைக்கு வேண்டிய புதிய குதிரைகளை வாங்கி வருமாறு பாண்டியன் வாதவூரரிடம் நிறையப் பொன் கொடுத்து அனுப்பினான். வாதவூரரைத் தம் அடியவராக்கி அருளச் சிவபெருமான் திருவுளங்கொண்டார். திருப்பெருந்துறையில் அமர்ந்தார். குதிரை வாங்குவதற்காக அவ்வூர் வழியே சென்ற வாதவூரர் குருமணியைக் கண்டு வணங்கினார். சிவஞானம் பெற்றார்."நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!" என்று பாடத் தொடங்கினார். இதற்குச் சிவ புராணம் என்று பெயர். இதனைக் கேட்ட இறைவன், "இறைவன் புகழ் பாடும் இவ்வாசகம் மாணிக்கம் போல ஞான ஒளி வீசுவதால் உமக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் தந்தோம்" என்று பாராட்டினார். மாணிக்கவாசகர் தாம் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் திருப்பெருந்துறையில் ஒரு பெரிய கோயிலைக் கட்டுவதில் செலவிட்டார். இதனை அறிந்து சினங்கொண்ட அரசன் ஆட்களை ஏவி வாதவூரரை மதுரைக்கு அழைத்து வரச் செய்தான். மாணிக்க வாசகரைக் காவலில் வைத்துத் துன்புறுத்தினான். சிவபெருமான் திருவிளையாடல் புரிய்த் திருவுளம் கொண்டார். காட்டில் உள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக மாற்றினார். தாம் ஒரு குதிரைச் சேவகனாகி அரண்மனைக்கு வந்தார். அரசனிடம் குதிரைகளை ஒப்படைத்தார். இதனால் மகிழ்ந்த மன்னவன் மாணிக்கவாசகரை விடுதலை செய்தான். 147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/156&oldid=833435" இலிருந்து மீள்விக்கப்பட்டது