பக்கம்:சீதா கல்யாணம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 79

ஆக, மண மண்டபம் முழுவதும் ஆட்கள் பலவிடத்தும் இருந்து வந்து நிறைந்து விட்டார்கள். பொன்னாலும் மணியாலும் புனைந்த கல்யாண மண்டபத்திற்குத் தசரதன் தேவியரோடு வந்து, ஆசனத்தில் அமர்ந்திருந்தான். சனகனும், முனிவரும், அரசரும், தேவரும், மெல்லிய அன்ன நடையுடைய மாதரும் வந்து தங்களுக்குரிய ஆசனத்திருந்தார்கள். இராமனும் சீதையும் நன்றாய் அலங்கரிக்கப்பட்ட வர்களாய் வந்து மண மண்டபத்தைச் சேர்ந்தார்கள்.

மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி - வென்றி நெடுந்தகை வீரனும், ஆர்வத்து இன்துணை அன்னமும் எய்தி இருந்தார்; ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். (தவிசு-ஆசனம். ஒன்றிய-நெருங்கிய தொடர்புடைய போகம் - பேரின்ப நிலை. யோகம் - யோக நிலைமை)

விவாக வேள்வி செய்ய வேதியர் வந்து சூழ்ந்தனர். வசிட்டர் மங்கல அக்னியை வளர்த்தார். இராமனை யும் சீதையையும் மணவறையில் மனப்பலகையில் இருத்தி, சனகன் இராமன் எதிர் நின்று சீதையை அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துக் கன்னிகா தானம் செய்தான். . . . -

அந்தணர் ஆசி, அரும் கலம் அன்னார் தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர் வந்தனை, வானவர் வாழ்த்து ஒலி போல முந்திய சிங்கம் முழங்கின, மாதோ. (அரும் கலம் அன்னார் - அருமையான ஆபரணம் போன்ற மாதர். முந்திய சங்கம் - சிறந்த சங்க வாத்தியம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/81&oldid=651287" இலிருந்து மீள்விக்கப்பட்டது