110 சீர்திருத்தச் செம்மல்
பதிலுரையாது புன்னகை பூத்துப் பேசாதிருந்தார். அந்தப் புன்முறுவலின் பொருள் அன்று எனக்கு விளங்க வில்லை. இன்றுதான் அது விளங்குகிறது. வழக்கை நீங்கள் விட்டு விட்டால் ஒழிய வழக்கு உங்களை விடாது என்பதைச் சொல்லாமல் சொல்லியுணர்த்தியதை நான் அப்பொழுது புரிந்து கொள்ளத் தவறிவிட்டேன். அன்று விளங்கவில்லை. இன்றுதான் அது விளங்குகிறது" - என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையிலுங்கூட, அந்தச் சிரிப்பை நினைந்து, அதற்கு நயமான பொருளும் உரைத்து, வியந்தாரே தவிர மனம் சோர்ந்து விடவில்லை.
'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று பேரறிஞர் அண்ணா அடிக்கடி தம்பிமார்களுக்குக் கூறுவதுண்டு. அந்த இதயத்தை - கலங்காத நெஞ்சுரத்தைச் சண்முகனார் இயற்கை யிலேயே பெற்றிருந்தார். அத்தகைய பேராற்றலைப் பலமுறை நான் கண்டதுண்டு.
அவருடைய 'இன்ப மாளிகை' அரண்மனை போன்றதென முன்னரே குறிப்பிட்டுள்ளேன். வழக்கு வழக்கென்று வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருந்தமையால் பொருளெல்லாம் இழந்து, இன்ப மாளிகையையும் இழந்து நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. செல்வம் வரும் வழியும் அடைபட்டது. ஆனால் அது செல்லும் வழி மட்டும் பெரிதாகிக் கொண்டிருந்தது.
ஒரு பழுதுபட்ட பழைய வீடு. சிதைந்த ஓடுகள் வேய்ந்த சிறிய வீடு. அவ்வீட்டிற்குள் வசித்து வந்தார். ஒரு நாள் நான் அங்கே அவரைக் காணச் சென்றேன். அங்கேயும் அந்த நிலையிலும் அதே குரல், அதே தோற்றம் அதே வரவேற்பு.