170 சீர்திருத்தச் செம்மல்
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் (சூரத்தில் என்று தந்தையார் கூறிய நினைவு) நடந்ததாம். அது குழப்பத்தில் முடிந்ததாம். பிரச்சினையில், அணுகுமுறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் திலகர் கோஷ்டி கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டதாம். அப்படி வெளியேறியவர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தியாகச் சுடர்களான, திரு. வ.உ. சிதம்பரனார், திரு. சுப்பிரமணிய சிவா மற்றும் சிலருடன் தந்தையாரவர்களும் வெளியேறி வந்து விட்டார்களாம். காந்தியடிகளின் அந்நிய நாட்டுத் துணி பகிஷ்காரத்தில் கலந்து கொண்டு செட்டிநாட்டு மக்களுக்குத் தேச பக்தியை ஊட்ட, காரைக்குடியில் மகார் நோன்புப் பொட்டலில் (தற்பொழுது அந்த இடத்திற்கு காந்தி சதுக்கம் என்று பெயர்) அந்நியத் துணிகளை வைத்துக் கொளுத்த ஒரு நாளை நிச்சயித்து, அன்று ஊர் முழுவதும் தண்டோரா போடச் செய்து, இவர்கள் வீட்டிலிருந்த விலை உயர்ந்த துணிமணிகளை எல்லாம் மூட்டைகளாகக் கட்டி, அந்த இடத்தில் குவித்துத் தீ வைத்துக் கொளுத்தி, ஓர் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்கள். அதிலிருந்து வீட்டில் அனைவரும் கதர் ஆடைதான் கட்டினோம். பாவாடையும் சட்டையும் அவ்வளவு கனமாக இருக்கும். ஆனால் அதைவிடப் பல மடங்கு கனமானது தாயார் அவர்களின் சேலை. அதைத் துவைக்கும் வேலைக்காரப் பெண் தூக்கிப்பிழிய முடியாமல் சங்கடப் படுவாளாம்.
மகாகவி பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழர் களைத் தலை நிமிர்ந்து வாழ வைத்த பெரியார் ஈ.வெ.ரா. தேசபக்தர்கள் சுரேந்திரநாத் ஆர்யா, வரதராஜுலு நாயுடு, ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகத் தன்னை மெழுகுதிரி ஆக்கிக் கொண்ட