வை. சு. சண்முகனார் 25
அவ்வாறே மகள் பார்வதியும் தந்தையார்க்கு விவரமாக எழுதி விட்டார். சிங்கப்பூரிலிருந்து வீடு வந்து சேர அப்பொழுது பத்து நாளாவது ஆகும். கப்பற் பயணம் மட்டும் எட்டு நாளாகும். இந்நிலையில், தாம் வந்து சேருமுன் மனைவி காலமாகி விட்டால் வைதிக முறைப்படி எதுவும் செய்தல் கூடாதென்றும், எவ்வாறு இறுதிச்சடங்கு நடைபெற வேண்டு மென்றும், இலக்குமி ஆச்சியின் தங்கை கணவர்க்கும் திரு. இராம. சுப்பையா அவர்களுக்கும் திரு. சொ. முருகப்பனார்க்கும் மகன் சோலைக்கும் மகள் பார்வதிக்கும் ஒரே மாதிரி ஐந்து மடல் எழுதி, அவ்வாறே நடைபெற வேண்டு மென்று தெரிவித்து விட்டார் சண்முகனார்.
மனைவியார் உடல் அடக்கம் செய்யப்படுமுன் அவ்வுடல் மிகுதியான மலர்களால் அணி செய்யப்பட்ட ஊர்தியில் வைக்கப் பட்டு, இன்னஇன்ன வீதிகள் வழியாகக் கொணர்ந்து, அடக்கஞ் செய்யப்பட வேண்டும். பிற சடங்குகள் செய்தல் கூடாது - என அம் மடலிற் குறிப்பிட்டிருந்தார்.
உடனே முருகப்பனார், இராம. சுப்பையா, கோனாபட்டுப் பழ. பழநியப்பச் செட்டியார், மகன் சோலை, மகள் பார்வதி முதலி யோர்க்குத் தெரிவித்து விட்டார். இராம. சுப்பையா அவர்கள்,
திருவரங்கம், உறையூர் முதலிய ஊர்களிலிருந்து தோழர்களை வரவழைத்தார். சில வீதிகளில் ஊர்வலமாக வருவதாலும் சடங்கு முறைகள் செய்யாமையாலும் குழப்பங்கள் நிகழினும் நிகழலா மென்று கருதியே தோழர்கள் வரவழைக்கப் பட்டனர். சண்முகனார் கட்டளை நிறைவேற்றப்பட்டது. சடங்கு முறைகள் நிகழாமையால் உறவினர்கள் உணவருந்தாது சென்றுவிட்டனர். சமைத்து வைத்த உணவெல்லாம் வீணாயிற்று.