பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 35

தந்தை பெரியார், பேராயக் கட்சியின் செயலாளராக இருந்த காலம். அப்பொழுதுதான் வ.வே. சுப்பிரமணிய ஐயர் 'குருகுலம்' தொடங்கி நடத்தினார்.

அதன் வளர்ச்சிக்காகப் பெரியார் ஈ.வெ.ரா. டாக்டர் வரதராசுலு நாயுடு, திரு. வி. கலியாண சுந்தரனார், வயி.சு. சண்முகனார் முதலிய பெருமக்கள் அரும்பாடுபட்டனர்.

இந்நிறுவனத்துக்குத் தமிழர்கள் பெரும் பொருள் உதவி செய்தனர், குறிப்பாகச் செட்டிநாட்டு மக்கள் நன்கொடையே மிகுதி என்னலாம். நம் சண்முகனாரின் நன்கொடையும் உண்டு.

பேராயக் கட்சியின் சார்பில் குருகுலத்துக்குப் பத்தாயிரம் உரூபா தருவதாக இசைந்து, அதன் செயலாளராக இருந்த பெரியார், முதலில் ஐயாயிரம் கொடுத்து விட்டு, மீதி ஐயாயிரம் பின்னர்த் தருவதாகக் கூறியிருந்தார்.

குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனி உணவு. தமிழ்ப் பிள்ளைகளுக்கு வேறு உணவு, உணவு வேறு வேறாக இருந்தது மட்டுமின்றி இருந்துண்ணும் இடங்களும் வேறு வேறு. வழி பாட்டிடங்களும் வேறு வேறாக இருந்தன. சாதி வேற்றுமைகள் குருகுலத்தில் வளர்க்கப்பட்டன.

இச்செய்தி பெரியாருக்குத் தெரிந்தமையால் குருகுலத்தில் சாதிபேதம் இருப்பதால் மீதி ஐயாயிரம் தர இயலாது என மறுத்து விட்டார். வ.வே.சு. ஐயர் தமது சூழ்ச்சித் திறத்தால் ஐயாயிரத்தை வேறு வகையிற் பெற்றுக் கொண்டார்.