பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


இந்தக் கடிதம் அனுப்பியபொழுது, பிரதானி, தொண்டமான் நாட்டில், சிவகங்கைச் சீமையை ஒட்டிய பாய்க்குடி என்ற கிராமத்தில் தென்னந்தோப்பு ஒன்றில் தங்கி இருந்தார். சிவகங்கைச் சீமை நடப்புகளை விருபாட்சியில் உள்ள ராணி வேலுநாச்சியாருக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். அத்துடன் சிவகங்கைச் சீமை நாட்டார்களுக்கும் ஒலைகள் அனுப்பி வைத்து தொடர்பு கொண்டு இருந்தார். சிவகங்கையை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பையும் உதவிகளையும் திரட்டுவதில் ஈடுபட்டு இருந்தார்.

"... தஞ்சாவூராரும் தொண்டமானும் இணைந்து நமக்கு படையும் பொருளும் வழங்க சம்மதித்து உள்ளனர். மைசூர் மன்னர் ஐதர் அலிகானின் படையும் இங்கு வரவிருக்கின்றது. ஆதலால், உங்களால் இயன்ற அளவு போர் வீரர்களையும் படைக்கலங்களையும் சேகரித்துக் கொண்டு நம்மிடம் வாருங்கள். நாம் எல்லோரும் இணைந்து இராமநாதபுரத்தையும், சிவகங்கையையும் திரும்ப கைப்பற்றி விடலாம்..."

என்று மறவர் சீமை முழுவதையும் மீட்பதற்கு திட்டமிட்டு இருப்பதைத் தெரிவிக்கும் செய்தியைக் கொண்ட அவரது ஒலை ஒன்று நவாப்பின் பணியாளரான தொண்டி அமில்தார் கையில் சிக்கியது.

மறவர் சீமையை மீட்பதற்கு பிரதானி தாண்டவராயபிள்ளை மறைமுகமான முறையில் இயங்கி வருகிறார் என்பதை அப்பொழுதுதான் கம்பெனியார் உணர்ந்தனர். நவாப்பின் மகன் உம்தத்துல் உம்ராவுக்கு இந்த தகவல் கிடைத்தவுடன் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டார். இரவு பகல் என்று பாராது பிரதானியார் முயற்சியை தோல்வியுறச் செய்ய முயன்றார். தளபதி நஜீர்கான், தளபதி பௌஷேர் ஆகியோரது துணை கொண்டு கிளர்ச்சிக்காரர்களை தேடிப்பிடிப்பதிலும், கோட்டைகளை வலுப்படுத்துவதிலும் ஈடுபட்டார்.

மனித வாழ்க்கையின் இறுதிப்பகுதி இயலாத்தன்மை கொண்ட முதுமை. ஒடும் பாம்பையும், துரத்திச் சென்று நசுக்கிக் கொல்ல முயன்ற அதே கால்கள்தான் இப்பொழுது நடமாடுவதற்குக் கூட தளர்நடை போடுகிறது. மிகுதியான பிரயாசை அனைத்தையும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்ற ஆசை தாங்க முடியாத சுமை!

பிரதானி தாண்டவராயபிள்ளை உடல் நலிவுற்றது. கண்களும் இதயக் கதவுகளும் இறுக்கமாக மூடிக்கொண்டன. மண்ணின் மீதும் மன்னர் மீதும் மாறாத அன்பு கொண்டு தளராது உழைத்த தியாகி மறைந்து விட்டார்.[1]


  1. கமால் Dr. S.M. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1989) P: 162