பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. மீண்டும் தன்னரசு நிலை

 

ராணி வேலு நாச்சியார் தமது படைகளுடன் மைசூர் மன்னரது உதவிப் படைகளுடனும் சிவகங்கை வருகின்ற செய்தியைக் கேட்ட மக்களது உள்ளங்களில் ஆர்வம் நிறைந்தது. ஆவேசம் மிகுந்தது. சிவகங்கை நகரின் மேற்கே மேலுர் சாலையில் அவர்கள் திரளாகக் கூடத் தொடங்கினர். சிவகெங்கை அரண்மனையிலும் பேட்டையிலும் பணியில் இருந்த நவாப்பின் சேவகர்களுக்கு இந்த செய்தி கிடைத்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். ஒருவாறு தங்களை ஆயத்தம் செய்து கொண்டு ராணியாரது படைகளை எதிர்பார்த்து கோட்டை வாசலில் குழுமி இருந்தனர். திரளான மக்கள் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு உத்திரவு இட்டனர். ஆனால் மக்கள் அவர்களது ஆணைக்குச் செவி சாய்க்காமல், மேற்கே காணப்படும் சிறிய புழுதிக் கூட்டம் பெரிதாகி வருவதையே ஆவலுடன் நோக்கிக் கொண்டு இருந்தனர்.

இரண்டு நாழிகை நேரத்தில் பெரும் ஆரவாரத்துடன் ராணி வேலுநாச்சியார், குதிரை அணிகள் புடை சூழ சிவகெங்கை நகர் எல்லையை அடைந்தார். கட்டுக்கடங்காமல் பாய்ந்துவரும் காட்டாறு போல மக்களது மகிழ்ச்சி உச்ச நிலையை அடைந்தது. நவாப்பின் சிப்பாய்கள் மீது ராணியாரது அணிகள் பாய்ந்தன. ராணியாரது குதிரைப்படையும் அவர்களைத் தாக்க முனைந்தது. சிப்பாய்கள் அங்கும் மிங்கும் மிரண்டு ஓடினர். அரசியாரும், இளவரசியாரும் மக்களது வாழ்த்தொலிகளுக்கிடையில் சிவகெங்கை கோட்டைக்கு வந்துசேர்ந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அரண்மனைக்குள் நுழைந்த ராணி வேலுநாச்சியார் உணர்ச்சிவசப்பட்டு ஒருசில நொடிகள் அப்படியே நின்றார். தமது அன்புக்கணவருடன் ஆண்டு பலவற்றைக் கழித்த இடமல்லவா அது!