பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிகக் குறைவு. கி.பி.1728 முதல் தொடங்கிய இந்தத் தன்னரசு பற்றி தொன்மையான சான்றாவணங்கள் எதுவும் கிடைக்காத நிலை. எனினும் மிகவும் முயன்று சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ஆவணங்களில் சிவகங்கை அரச வழியினரான திரு. பாப்பாத்துரை என்ற திரு. ஸ்ரீரங்கராஜன் அவர்கள், நாலுகோட்டைப் பாளையக்காரர் வழியினரான செல்வ ரகுநாதன் கோட்டை, முத்தமிழ்ப் புலவர் டாக்டர் புரட்சிதாசன் ஆகியோரிடம் உள்ள ஆவணங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணங்கள் காப்பகத்தில் ஆவணத் தொகுதிகள் மற்றும் படமாத்துர், நாலுகோட்டை, சக்கந்தி, அரண்மனை சிறுவயல், காளையார்கோவில், அரளிக்கோட்டை, விருபாட்சி ஆகிய ஊர்களில் கள ஆய்வுகளில் கிடைத்த செப்பேடுகள் மற்றும் குறிப்புகளை கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மன்னர்களது நாட்டுப்பற்று, சமுதாயப் பணிகள், தமிழ்த் தொண்டு, சமயப்பொறை ஆகிய அருஞ்செயல்களுடன் சிவகங்கைச்சீமை மண்ணின் மாண்பு, தொன்மை, மக்களது மொழிப்பற்று, விடுதலை உணர்வு ஆகிய பல நிலைகளையும் சுருங்கிய வடிவில் குறுகிய கால வரம்பில் தொகுக்கப்பட்டுள்ளது. எனினும் எல்லாவகையிலும் நிறைவு பெற்ற நூலாக அல்லாமல் சிவகங்கைச் சீமை வரலாறு பற்றிய முதல் நூல் என்ற வகையில் வரலாற்று வாசகர்களும் ஆய்வாளர்களும் இந்த நூலுக்கு வரவேற்பு வழங்கி இன்னும் பல வழி நூல்கள் வெளிவருவதற்கு உதவ வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

மேலும், ஏற்கனவே பல சமுதாயப் பணிகளில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டு தொண்டு புரிந்து வருகின்ற சிவகங்கை ராணி மேதகு இராஜலட்சுமி நாச்சியாரவர்கள் சிறந்த வரலாற்று உணர்வுடன் இந்த வரலாற்று நூல் வெளிவருவதற்கு ஆக்கமும் ஆதரவும் அளித்தமைக்கு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் பெருமுயற்சிக்குப் பின்னணியாக விளங்கிய எனது அருமைச் சகோதரரும் சிவநேயத் திருத்தொண்டருமான பாப்பாத்துரை என்ற ஸ்ரீரங்கராஜன் அவர்களுக்கும் இந்த நூலினை அழகிய வரலாற்றுப் பெட்டகமாக அமைத்துக் கொடுத்த சென்னை மாஸ் டைப்போ கிராபிக்ஸ் நிறுவன உரிமையாளர் திரு. வி.எஸ்.சுரேஷ் பி.இ. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இராமநாதபுரம்,
எஸ்.எம்.கமால்
25 டிசம்பர் 1996
நூலாசிரியர்

X