பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 91


இயலாதவராக, நாலுகோட்டை பாளையக்காரர் குடும்பத்துக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாகக் கருதி, துடிதுடித்தார். உடனடியாகத் தமது ஏவலர்களை அனுப்பி அடைப்பம் வெள்ளைக்காலுடையாரைப் பிடித்து வருமாறு செய்தார். அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்றார். பெரும்பாலும் இந்த நிகழ்வுகள் சசிவர்ணத் தேவரது ஆட்சிக் காலத்தின் இறுதியில் நிகழ்ந்து இருக்க வேண்டும். வெள்ளைக்காலுடையாரது மக்கள்தான் மருது சகோதரர்கள் என்பதை,

“அடப்ப பிடி வெள்ளைக்காலுடையாரீன்ற
அண்ணன் தம்பி யிருமருதும்..."

என்ற “சிவகங்கைச் சீமை கும்மி” தொடர்கள் (பக்கம் 10) உறுதி செய்கின்றன. படைமாத்தூர் ஒய்யத் தேவரது இரண்டாவது மகன் கெளரி வல்லபத் தேவரின் பிரதானி மருது சேர்வைக்காரர்களுக்கும் கெளரி வல்லபத் தேவருக்கும் இடையில் பகைமை நிலவியதற்கு இந்தப் பாரம்பரிய பழிவாங்கும் பகைமை உணர்வு ஒன்றே போதுமான காரணம் தான்.

நாளடைவில் ராணி வேலுநாச்சியார் தமது மகளை படைமாத்துார் கெளரி வல்லபருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி பிரதானிகளுடன் ஆலோசனைகலந்த பொழுது, பிரதானிகள் இருவரும் இந்த சம்பந்தத்தை ஆட்சேபித்தனர். சிவகங்கைச் சீமை மன்னரது மருமகனாவதற்கு முற்றிலும் தகுதி இல்லாதவர். முரட்டுத்தனமும், அரசகுடும்பத்திற்குரிய மனோபாவமும் அற்றவர் கெளரி வல்லபர் என்பது பிரதானிகளது முடிவு. மறுப்பு. தமது மகளது திருமணத்திற்கு இப்படியொரு ஆட்சேபணை வரக்கூடும் என்பதை ராணி வேலுநாச்சியார் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பிரதானிகளது ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திருமணத்தை எப்படி முடிப்பது...? மிகுந்த மன வேதனையால் ராணி தத்தளித்தார்.

சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் கெளரி வல்லப தேவர் பிரதானிகளால் காளையார் கோவிலில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி ராணியாருக்கு கிடைத்தது. இது பற்றி பிரதானிகளிடம் கேட்டபொழுது, கெளரி வல்லபர் சிறையில் வைக்கப்படவில்லை என்றும், சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றி மீண்டும் சிவகங்கை இராமநாதபுரம் கொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட, சேது நாட்டை அமைக்க முயலும் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னருடன் கெளரி வல்லபர் ஓலைத் தொடர்பு கொண்டு இருப்பதாகவும், இது சம்பந்தமான விசாரணைக்காக அவரை காளையார் கோவிலில் தனிமைப்படுத்தி வைத்து இருப்பதாக தெரிவித்து ராணியாரது குற்றச்சாட்டை மழுப்பி விட்டனர். கெளரி வல்லபர் பிரதானிகளுக்கிடையில் ஏற்பட்ட இந்தப் பகைமைக்குரிய காரணம் என்ன என்பது அறியத் தக்கதான ஆவணம்