பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


எதுவும் கிடைக்கவில்லை.

வெள்ளச்சி நாச்சியாரது திருமணம் பற்றி மீண்டும் ராணியார் பிரதானிகளிடம் குறிப்பிட்ட பொழுது, தக்க மாப்பிள்ளை ஒருவரை அவர்கள் தேடி வருவதாகவும் விரைவில் ராணியாருக்கு முடிவான தகவல் அளிப்பதாகவும் தெரிவித்தனர். ராணியார் மேலும் கவலைப்பட்டார். ஆனால், அவரால் பிரதானிகளை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, சிவகங்கைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான சக்கந்தி தேவரது மகன் வேங்கன் பெரிய உடையாத் தேவர். இளவரசிக்கு ஏற்ற மாப்பிள்ளையென்றும், படை மாத்துார் போன்று நாலு கோட்டைக் குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்டவர் இல்லையென்றாலும், செம்பிநாட்டுக் கிளையைச் சேர்ந்த மறவர் என்பதையும் தெரிவித்தனர். மேலும் தாமதப்படுத்துவதினால் எந்த மாற்றமும் ஏற்படும் சூழ்நிலை இல்லை என்பதை அரசியார் உணர்ந்தார். சக்கந்தி சம்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். அவருக்கு மிகப் பெரிய கவலையளித்து வந்த இளவரசியார் திருமணம் சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவருடன் நிகழ்த்தப்பட்டது.[1]

திருமணம் என்று குறிப்பிட்டாலே இரு தரப்பில் யாராவது ஒரு தரப்பினருக்கு உள்ளக் குமுறல்கள் இருப்பது இயல்பு. இந்தத் திருமணம் ராணி வேலு நாச்சியாரது மனக் கவலையின் ஒரு பகுதிக்கு தீர்வாக அமைந்தாலும், அவர் விரும்பியபடி படை மாத்துாராருடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள இயலவில்லை! இது போல இன்னும் அவரது எண்ணங்களுக்கு எதிராக என்னவெல்லாம் நடக்குமோ என்பது ராணியாருக்கு ஏற்பட்டகவலை. அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அதனை உறுதிப்படுத்தின.


  1. கமால் Dr. S.M. மாவீரன் மருதுபாண்டியர் (1989) பக்: 12